மைசூரின் சாமுண்டீஸ்வரி ஆலய தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதையொட்டினார் போன்றிருப்பது தமிழகத்தின் குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.
தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை, நவராத்திரியின் 9ம் நாளான ஆயுத பூஜையின் மறுநாள் விஜய தசமியன்று குலசையில் தசரா திருவிழா அமர்க்களப்படும். அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதிலுமிருந்து காலையிலிருந்து இரவு வரை தரிசனத்திற்காக வரும் பக்தர்களால் அந்தச் சிறிய கிராமமே குலுங்கும். அன்றைய தினம் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அன்னையை தரிசனம் செய்துவிட்டுச் செல்வர் என்கின்றனர் அந்தப் பகுதியினர். இதனால் போக்குவரத்து கூட நகரில் பல பகுதியில் திருப்பிவிடப்பட்டு பக்தர்களுக்காக வெகு தொலைவிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.
குலசையின் ஞான மூர்த்தீஸ்வர சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. சிவபெருமானும், பார்வதியம்மையும் அதிசயமாக ஒருசேர அமர்ந்திருப்பது இங்கு விசேஷம். இத்துறைமுகத்தின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் குலசை முத்தாரம்மனை வழிபட்டுவிட்டு கடல்வணிகம் மேற்கொள்ளும் வணிகர்கள் நெருக்கடியின்றி திரும்பி, நேர்ச்சையை செலுத்துவர், என்பது வரலாறு. அதன்படி குலசை ஆலயம் வந்து காப்புக்கட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஒவ்வொறு குழுவாகச் செயல்படுவர்.
அவ்வாறு விரதம் மேற்கொள்ளும் போது, காளி, பத்ரகாளி, ராமர், வாலி, 12 கையுடன் கூடிய திரிலோக அம்மன் என்று தங்களின் விருப்பப்படி வேடம் தரித்து இன்று குலசை நோக்கி வந்தனர். ஒவ்வொறு குழுவும், தாரை தப்பட்டை, ராஜமேளம் என்று தரையதிர வாத்தியமிசைத்து வருவதால், காவல்துறை அதற்கு ஏற்றார் போன்று சோதனைசாவடியோடு அவற்றிற்கு தடைவிதித்ததோடு, அம்மனுக்கு உகந்த மேளம் மட்டுமே இசைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தனர். காவல்துறையின் அறிவுறையின்படி அதனை மேற்கொண்டனர் பக்தர்கள். காலை முதலே முத்தாரம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்த வண்ணமிருந்தது. விஜயதசமியான இன்று அம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர். அதிகாலை முதல் இரவுவரை வழிபாடு தொடர்ந்து நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரையில் நடக்கும் சூரவதம் விழாவை காண பல லட்சம் பக்தர்கள் திரளுவர் என்பதால் மாவட்ட எஸ்.பி.யான பால அருண் கோபாலன் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். சூரவதம் முடிந்த காலை சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நீராடி காப்புகளை நீக்கி தங்களின் விரதத்தை முடிப்பது பக்தர்களின் வழக்கமாக உள்ளது.