புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் 33 அடி உயர பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் குடமுழுக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, மெய்யநாதன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் அன்னதானமும் தயாராகி வருகிறது.
இந்நிலையில் இன்று மாலையில் இருந்து குளமங்கலம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சீர் கொண்டு வந்து கொடுக்கின்றனர். கீரமங்கலத்தில் இருந்து கிராம மக்களுடன் இஸ்லாமியர்களும் இணைந்து வந்து சீர் கொடுத்து சிறப்பித்தனர். வாழை மரங்கள் தோரணங்கள் கட்டி செண்டை மேளம் முழங்க குளமங்கலம் கிராமத்தினர் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இரவிலும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாளைய அன்னதானத்திற்கு காய்கறிகள் நறுக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கிறது.