தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக தரப்பில் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நேற்று சேலத்தில் பிரச்சாரம் செய்த அவர் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். குறிப்பாக மக்களை பற்றி முதல்வருக்கு எந்த கவலையும் இல்லை என்றும், எதை செய்தாலும் முதல்வர் தன்னை விளம்பரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பேச்சின் உச்சகட்டமாக தமிழகத்தில் ஒரு பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, "தவழ்ந்து வந்தவர்கள் எல்லாம் உழைத்து வந்தவர்களை பார்த்து பொம்மை என்று சொல்வது வேடிக்கையாகவும், விநோதமாகவும் இருக்கிறது. முதல்வரை விமர்சிக்கும் முன் தான் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.