கிருஷ்ணகிரி அருகே மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பிக்கனப்பள்ளியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 187 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக மஞ்சுநாத் (43) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பெட்டியில் சிலர் புகார் மனுக்களை போட்டிருந்தனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். அதன்பேரில் ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் கோவிந்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஆசிரியர் மஞ்சுநாத் அவரிடம் படித்து வரும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியவந்தது. இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கை கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பேரில், முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, பட்டதாரி ஆசிரியர் மஞ்சுநாத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.