விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி(நாளை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
அதோடு மாநாட்டுத் திடலில் அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூநாச்சியார், அஞ்சலையம்மாள், மருது சகோதரர்கள் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் கட்டவுட்டுகளும், மாமன்னர்கள், சேர சோழ, பாண்டியர் ஆகியோர்களின் கட்டவுட்டுகளும் இடம்பெற்றுள்ளது.
இதனிடையே த.வெ.க. மாநாட்டிற்கு வருவதற்குத் தமிழக முழுவதும் உள்ள தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ள நிலையில் அங்கு வைக்கப்படவுள்ள 600 அடி கொடி கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுகிறார். அதன்பின் 6 மணிக்கு மேல் தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசவுள்ளார். அதில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும் அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “தந்தை பெரியாரை முன்னிறுத்தி நடிகர் விஜய் கட்சி தொடங்கியிருக்கிறார். அதற்கு வாழ்த்துக்கள். தமிழகத்தில் யார் அரசியலில் ஈட்டுப்பட்டாலும் திராவிட இயக்கத்தின் மூளை, கரு, தந்தை பெரியாரைப் பயன்படுத்தாமல் அரசியல் நடத்த முடியாது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. மாநாடு நடத்தும் விஜய்க்கு வாழ்த்துக்கள். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவி கூட அனைவரும் வியக்கும் வகையில் பிரம்மாண்டமாக மாநாடு நடத்தினார். மகிழ்ச்சியாக இருந்தது. விஜய்யும் தற்போது நடத்துகிறார். பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று” எனப் பேரியுள்ளார்.