Skip to main content

கொளத்தூர் எனது சொந்த பிள்ளை, ஆர்.கே.நகர் எனது தத்து பிள்ளை, வளர்ப்புப் பிள்ளை: மு.க.ஸ்டாலின் உரை

Published on 12/12/2017 | Edited on 12/12/2017
கொளத்தூர் எனது சொந்த பிள்ளை, 
ஆர்.கே.நகர் எனது தத்து பிள்ளை, வளர்ப்புப் பிள்ளை: 
மு.க.ஸ்டாலின்  உரை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  (11-12-2017) ஆர்.கே.நகரில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தோழமைக் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் அனைவரும் பங்கேற்ற மாபெரும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில், கழக வேட்பாளர் மருது கணேஷ் அவர்களை ஆதரித்து ஆற்றிய உரை விவரம்:



 தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட தலைவர், சென்னை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் சட்டப்பேரவை உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் அவர்களே, முன்னிலை ஏற்றுள்ள சென்னை கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் சகோதரர் சேகர் பாபு அவர்களே, வரவேற்று மகிழ்ந்துள்ள பகுதி கழக செயலாளர் ஏ.டி. மணி அவர்களே, நிறைவாக நன்றியுரை ஆற்ற இருக்கின்ற வட்ட செயலாளர் நாகராஜன் அவர்களே, இந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து உரையாற்றி அமர்ந்திருக்கின்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்னுடைய அன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய திருநாவுக்கரசர் அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்னுடைய ஆருயிர் சகோதரர் வைகோ அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் முத்தரசன் அவர்களே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களே, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்னுடைய ஆருயிர் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அவர்களே, கொங்குநாடு மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் அவர்களே, திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் தனபாலன் அவர்களே, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் அவர்களே, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் கட்சியின் தலைவர் பொன்.குமார் அவர்களே, சமூகநீதி இயக்க தலைவர் பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களே, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் அவர்களே, தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் அவர்களே, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன் அவர்களே, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளர் கதிரவன் அவர்களே, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவன தலைவர் அம்மாவாசி அவர்களே, இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது அவர்களே, கிருத்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் அவர்களே, இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்துக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்னுடைய ஆருயிர் அண்ணன் துரைமுருகன் அவர்களே, தோழமைக் கட்சிகளின் தோழர்களே, பெருந்திரளாக திரண்டிருக்கும் பெரியோர்களே, அருமை தாய்மார்களே, என் உயிரோடு கலந்து இருக்ககூடிய தலைவர் கலைஞர் அவர்களின் உடன்பிறப்புகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

 வருகிற 21 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் வேட்பாளராக, நம்முடைய தோழமைக் கட்சியின் துணையோடு ஆதரவோடு உங்களிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் வழக்கறிஞர் மருது கணேஷ் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க உதயசூரியன் சின்னத்திற்கு நீங்களெல்லாம் ஆதரவு தந்திட வேண்டும் என்கிற உணர்வோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு உரையாற்றக் கூடிய வாய்ப்பினை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

 எல்லோரும் உரையாற்றுகிற நேரத்தில் ஒன்றை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னார்கள், நம்முடைய தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நாம் இன்றைக்கு நம்முடைய தன்மானத்தை இழக்கும் நிலையில், சுயமரியாதையை இழக்கும் ஒரு ஆபத்தான நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் தமிழகத்தை காப்பாற்ற, குறிப்பாக இந்த குதிரைபேர ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டுமென்ற நோக்கோடு நம்முடைய பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எல்லாம், ஒருங்கிணைந்து ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.



நான் எண்ணிப் பார்க்கிறேன், கடந்த காலங்களில் நமக்குள் எத்தனையோ மாறுபாடுகள் வேறுபாடுகள் இருந்திருக்கலாம். அது கருத்து வேறுபாடுகளாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட கருத்துகளால் ஏற்பட்ட காயத்தில் இருந்து வெளிப்பட்ட இரத்தத்தை துடைத்து விட்டு நாமெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் என்று சொன்னால், தமிழ்நாட்டை காப்பாற்ற என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த மேடை, தமிழ் மக்களுக்காக போடப்பட்டு இருக்கும் மேடை. இந்த மேடையில் தான் அனைத்துக் கட்சித் தலைவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். தமிழகத்திற்காக போடப்பட்டு இருக்கும் இந்த மேடை தமிழக மக்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இந்த மேடை அமைந்தாக வேண்டும். குறிப்பாக மத்திய மாநில அரசுகளின் சார்பில் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் இருந்து அந்த அநீதிகளில் இருந்து காப்பாற்ற அவர்களை மீட்டெடுக்க வேண்டுமென்கிற ஒரே நோக்கோடு இன்றைக்கு நாமெல்லாம் இந்த மேடையில் ஒன்றாக அமர்ந்திருக்கின்றோம். இது ஒரு தொடக்கம். இந்த தொடக்கம் ஒரு மாற்று நிலையை தமிழகத்திற்கு உருவாக்கி தருவதற்கு நிச்சயமாக இந்த ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் நம்முடைய அணி, மிகப்பெரிய வெற்றியை பெற இருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்லை.

இந்த தொடக்கம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. நம்பிக்கையை மட்டுமல்ல, இந்த அணி, இந்த அமைப்பு, இந்த தொடக்கம் தொடர வேண்டும். இது தொடர வேண்டுமென நான் மட்டுமல்ல, இந்த மேடையில் இருக்கும் தலைவர்கள் மட்டுமல்ல இதோ எதிரிலே அமர்ந்திருக்கும் நீங்களும்,தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்துனை மக்களும் அதைத்தான் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாகள். ஆக இது நிச்சயம் தொடரும், தொடரும் என்று ஆயிரம் முறை இந்த மேடையிலே எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.

நான் நம்முடைய மேடையின் வரலாற்றை எடுத்துச் சொல்ல, நமக்கு முன்னே அமைந்திருக்கும் ஒரு மேடை, அந்த மேடைக்கும் நமக்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. ஒரு வித்தியாசமான மேடை அந்த மேடை. என்னவென்றால், டெல்லியில் இருக்கும் பி.ஜே.பி ஆட்சி அமைத்திருக்கும் மேடையில் தான் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இன்றைக்கு அமர்ந்து இருக்கிறார்கள். இதுதான் உண்மை. இந்த மேடை நமக்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிராக அமர்ந்திருக்கும் அந்த மேடையில் இன்றைக்கு நம்முடைய நிலையை நாம் எண்ணிப் பார்த்திட வேண்டும்.இந்த ஆர். கே.நகர் இடை-த்தேர்தல் என்பது தமிழக மக்களின் மேடைக்கும், தமிழக மக்களுக்கு எதிராக அமைந்திருக்கும் பி.ஜே.பி மற்றும் அதிமுக மேடைக்கும் இடையில் நடைபெறும் போட்டி என்பதை முதலில் நீங்கள் உணர்ந்தாக வேண்டும். அந்த பி.ஜே.பி அமைத்திருக்கும் மேடையில் ஒருவருக்கு இடம் கிடைக்கவில்லை, தனக்கு இடம் கிடைக்கவில்லை என்று தன்னுடைய தொப்பியை இழந்த நிலையில் களத்தில் நிற்கிறார்.



நான் அவரைப்பற்றி அதிகம் பேசி அதிக நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆனால், ஒட்டுமொத்த தமிழகமும் இன்றைக்கு சூறையாடப்பட்டு இருக்கிறது எனச் சொன்னால், அந்த கூட்டாளியும் சேர்ந்து தான் தமிழகத்தை சூறாயாட காரணமானவர் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. எட்டு மாதங்களுக்கு முன்பு வரை ஒரே கூட்டாளியாக இருந்தவர்கள் தான், அவர்கள் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.

இந்த ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளராக நின்று, வெற்றி பெற்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள், முதலமைச்சராக இருந்த அம்மையார் அவர்களின் மரணம் மர்மமாக மாறிவிட்டது. அப்படி நடந்து இருக்கும் மர்ம மரணத்தில் சமபங்கு கூட்டாளி தான் இவர்கள் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவருக்கு பல உதாரணங்கள் உண்டு. பல சான்றுகள் உண்டு. ஆதாரத்தோடு குறிப்பிடுகிறேன், 22/09/2016 அன்று அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்க்ப்படுகிறார். அப்படி அனுமதிக்கப்பட்ட அவர் 05-12-2016 அன்று மறைந்துவிட்டார் என்ற அதிகாரப்பூர்வமான செய்தி வருகிறது. 22-09-2016 அன்று அன்மதிக்கப்பட்டு 05-12-2016 வரையில் மறைவு செய்தி வருகிற வரையில் இந்தக் கூட்டாளிகள் தானே அவரின் பக்கத்தில் இருந்து இருக்கிறார்கள், இவர்கள் தானே அப்போலோ மருத்துவமனையில் கூடாரம் அடித்துக் கொண்டு தவமிருந்து கொண்டிருந்தார்கள், அதை யாராலும் மறுக்க முடியுமா, யாராலும் மறைத்திட முடியுமா? ஒவ்வொரு நாளும் வெளியில் வந்து என்ன செய்தி சொன்னார்கள், அம்மா நலமாக இருக்கிறார்கள், அம்மா உடற்பயிற்சி செய்கிறார், அம்ம இட்லி சாப்பிட்டார், அம்மா சட்னி சாப்பிட்டார் எனச் சொல்லவில்லையா? 24 மணி நேரமும் தாடியோடு இருந்தாரே ஓ.பி.எஸ், அதேபோல இபிஎஸ் ஆகியோர் இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்லிக் கொள்கிறார்களே, என்னை பொறுத்தவரையில் அவர்கள் மூன்று குழல் துப்பாக்கிகள்.



ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் மற்றும் சசிகலா. 75 நாட்களாக ஜெயலலிதாவின் உடல்நலத்தை மூடி மறைத்தவர்கள்தான் இந்த மூன்று குழல் துப்பாக்கிகள். ஓ.பி.எஸ்., அவர்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்ட நேரத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருக்கும் ‘டெங்கு’ பாஸ்கர், மன்னிக்க வேண்டும், ‘குட்கா’ பாஸ்கர், விஜயபாஸ்கர் என்ன சொன்னார், சிபிஐ விசாரித்தால் முதல் குற்றவாளி ஓ.பன்னீர்செல்வம்தான் என்று சொன்னார். உடனே ஓ.பன்னீர்செல்வம் திருப்பி சொன்னார், நான் ஒன்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அல்ல, ஹெல்த் மினிஸ்ட்டராக இருப்பவர் விஜயபாஸ்கர் தான், அவர் தான் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, சிபிஐ விசாரணை வருகிறபோது முதல் அக்யூஸ்ட் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று சொல்லவில்லையா?

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5ம் தேதி இறந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அப்படி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இதே பன்னீர்செல்வம் அவர்கள் இரவோடு இரவாக, நள்ளிரவில் ராஜ் பவனுக்கு சென்று முதலமைச்சராக பதவியேற்கிறார். அப்படி பதவியேற்ற ஓ.பி.எஸ் அவர்கள் 62 நாட்கள் முதலமைச்சர் பதவியில் இருக்கிறார். அப்போது ஒரு முறையாவது வாய் திறந்து, அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சொன்னதுண்டா?

அவர் முதலமைச்சராக இருந்தபோதுதான் லண்டனில் இருக்கின்ற ரிச்சர்ட் பியலேவை அழைத்து வந்து, பத்திரிகையாளர்களை அழைத்து, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கின்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, அதில் எந்த தவறும் நடக்கவில்லை, முறையாகதான் சிகிச்சை அளிக்கப்பட்டது என்று சொல்ல வைத்தாரா இல்லையா?



அதற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் 16.2.2017 அன்று முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு, அதற்கு முன் 62 நாட்களாக முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் உடனே என்ன செய்தார்? அம்மையார் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதையும் தாண்டி, சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டார். கேட்கவில்லையா? மேலும் சொன்னார், இ.பி.எஸ் தலைமையில் நடக்கும் ஆட்சி, ஊழல் ஆட்சி என்றார். அதற்காக ஓ.பி.எஸ் தலைமையில் போராடவில்லையா? வீதிகளில் வந்து போராடவில்லையா?

இதே எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு, சுகாதாரத் துறை செயலாளராக இருக்கும் ராதாகிருஷ்ணன் அவர்கள் மூலம் பத்திரிகையாளர்களிடம் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருந்தது? முதலமைச்சருக்கு முறையாக சிகிச்சையளிக்கப்பட்டிருக்கிறது, எந்த தவறும் நடக்கவில்லை, அவர் நன்றாக இருந்தபோது வாய்வழியாக தான் சாப்பிட்டார், எந்த குறையும் அவருக்கு வைக்கவில்லை என்று அவர் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிடுகிறார். ஆகவேதான், அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை மறைப்பதில் முக்கிய பங்கு வகித்திருப்பவர்கள் இந்த ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் என்று இந்த ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களான உங்களிடத்தில் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட விரும்புகிறேன். 161 நாட்களாக முதலமைச்சராக இருக்கும் இ.பி.எஸ் இதை பற்றி வாய் திறந்தாரா?

இங்கே குறிப்பிட்டார்களே, டெல்லியில் இருந்து பஞ்சாயத்து நடந்தது. அது, கட்டப்பஞ்சாயத்தாகவே நடந்தது. அதன்பிறகு சென்னையில் பஞ்சாயத்தை தொடர்ந்தார்கள் அதன்பின்னர் ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் கைக்கோர்த்தார்கள். தமிழகத்தின் கவர்னரே அழைத்து கைகோர்த்து வைக்கவில்லையா? அந்த காட்சிகளை எல்லாம் பார்த்தோமா, இல்லையா?

 கைகோர்த்தப் பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 17.8.2017 அன்று ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். ஓய்வுப் பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்பது அறிவிப்பு. அறிவித்தார்களே தவிர நீதிபதியை நியமித்தார்களா? இல்லை. ஏன் நியமிக்கவில்லை என்று கைகோர்த்த ஓ.பி.எஸ் கேட்டாரா? கேட்கவில்லை. ஜெயலலிதா அல்ல பதவிதான் முக்கியம் என்று இருந்த காரணத்தால், என்ன பதவி, எப்படிப்பட்ட இலாகாக்கள், என்னுடைய ஆதரவாளர்களுக்கு என்ன பதவிகள் என்று உரிமையோடு கேட்டுப்பெற்றாரே தவிர விசாரணை கமிஷனுக்கு யார் நீதிபதி என்று அவர் வாய் திறந்து கேட்டாரா?

அனைத்து கட்சிகளும், விசாரண கமிஷன் அமைத்திருக்கலாம். ஆனால், நீதிபதியை நியமிக்கவில்லையே என்று கேட்ட நேரத்தில், 40 நாட்கள் கழித்து ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அவர்கள் தலைமையில் விசாரனை கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். அப்போதே நாங்கள் கேட்டோம், ஓய்வுப் பெற்ற நீதிபதியை அறிவித்திருக்கிறீர்களே, அவருக்கு என்னென்ன அதிகாரங்கள் இருக்கிறது? லண்டனில் இருக்கின்ற டாக்டரை அழைத்து விசாரிக்க முடியுமா? டெல்லியில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களை அழைத்து குறுக்கு விசாரணை நடத்த முடியுமா? மத்திய அமைச்சர்களை அழைத்து அவர்களிடத்தில் விவாதிக்க முடியுமா? அந்த அதிகாரம் ஓய்வுப் பெற்ற நீதிபதிக்கு இருக்கிறதா? தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்தாரே வித்யாசாகர் ராவ் அவர்கள், அவருக்கு சம்மன் அனுப்பி அழைத்து விசாரணை நடத்த முடியுமா? முடியாது. ஆகவே, இதுவொரு கந்துடைப்பு நாடகம் என்று நாங்கள் அப்போதே சொன்னோம், இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.



இதே ஓ.பி.எஸ் அவர்கள் 117 நாட்கள் அமைச்சராக இருந்தபோது, அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த மர்மத்தை மறைத்தே வைத்திருந்தார்கள். அதேபோல இ.பி.எஸ் அவர்கள் முதலமைச்சராக பதவியேற்று 201 நாட்கள் இந்த மர்ம மரணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கிறார். என்ன காரணம்? ஒரே காரணம், சசிகலாவை காப்பாற்ற, சசிகலாவின் காலில் விழுந்து எப்படியாவது முதலமைச்சர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று மானங்கெட்ட நிலையில் காலில் விழுந்து பதவிப் பெற்றபோது, அம்மையார் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை பற்றி அன்றைக்கு நீங்கள் பேசியதுண்டா? நான் கேட்கிறேன்.

 இந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற என்ன முக்கிய காரணம்? ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் தான் என்று பகிரங்கமாக நான் ஒரு குற்றச்சாட்டை சொல்கிறேன். இடைத்தேர்தல் வரும். ஆனால், இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல் இந்த ஆர்.கே.நகரில் வந்திருக்கிறது. சென்றமுறை 12.6.2017 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் வேட்பாலர்களை அறிவித்து, பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நேரத்தில், வாக்குப்பதிவு நடைபெற இரண்டு நாட்கள் தான் இருக்கின்றது என்ற நேரத்தில், தேர்தல் ரத்து செய்யப்படுகிறது, ஒத்திவைக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் சொன்னார்கள்? வருமான வரித் துறையினரின் சோதனையில் ஒரு அமைச்சரின் வீட்டில் 89 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனைக்கான ஆதாரங்கள் சிக்கியிருக்கின்றன. அப்படி கிடைத்த ஆதாரத்தில் முதலிடத்தில் இருப்பவர் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. அவரைத் தொடர்ந்து 11 அமைச்சர்கள் அந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள். இதை காரணமாக வைத்து பணப் பட்டுவாடா நடந்திருக்கிறது, அதற்கு ஆதாரத்தை வருமான வரித்துறையே தந்திருக்கிறது என்று தேர்தல் கமிஷன் தேர்தலை ஒத்திவைத்ததற்கான காரணத்தை சொன்னது.

இந்த சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் இப்போது ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிக்கு கிடைத்திருக்கிறது. அப்படி கிடைத்திருப்பதால் நாங்கள் அச்சமடைந்திருக்கிறோம் என்று யாரு கருதிட வேண்டாம். இதே இரட்ட இலை சின்னத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் இருந்தபோதே பலமுறை தோற்கடித்திருக்கிறோம். அம்மா, அம்மா என்று சொல்கிறீர்களே அந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களை பர்கூரில் தோற்கடித்திருக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் டெபாசில் கூட இழக்க வைத்திருக்கிறோம். மறந்துவிடக் கூடாது.

இரட்டை இலை அவர்களுக்கு வந்துவிட்டது என்ற காரணத்தால் எங்களுக்கு கவலை வந்துவிட்டது என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. எங்களுடைய கவலையெல்லாம், நாடு இன்றைக்கு குட்டிச்சுவராகிப் போய்க் கொண்டிருக்கிறதே, அதை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இன்றைக்கு இந்த மேடையில் அமர்ந்திருக்கின்ற அத்தனை தலைவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறதே தவிர வேறு அல்ல. ஆகவே, நான் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுத் தாக்கல் எல்லாம் முடிவுப் பெற்று, பிரசாரத்தில் இன்று நாம் ஈடுபட்டிருக்கிறோம். அதிமுகவின் பிரசாரமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய செயல் வீரர் கூட்டத்திலேயே ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் பேசியிருக்கிறார்கள். என்ன பேசியிருக்கிறார்கள் தெரியுமா?

 நாங்கள் ஒன்றாக சேருவதற்குதான் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ”எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் கேட்கின்ற கேள்வி, முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் இருக்கின்ற அந்த இரண்டு பேர் அந்த செய்தியை சொல்கிறார்கள் என்றால், அதனை தேர்தல் ஆணையம் விளக்கிட வேண்டாமா? இதற்கு தேர்தல் ஆணையம் என்ன சொல்லப் போகிறது?

நேற்றைய தினம் கூட எனக்கு ஒரு தகவல் கிடைத்தது. என்ன தகவன் என்றால், அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் பாபு வாக்காளர்களிடத்தில் டோக்கன் விநியோகித்துக் கொண்டிருப்பதாக ஒரு செய்தி. தாய்மார்களிடத்தில் ஒரு விண்ணப்ப படிவம் கொடுத்திருக்கிறார்கள். இதோ என் கையில் ஆதாரம் இருக்கிறது. இதனை இப்போது வீடு வீடாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரெல்லாம் ஸ்கூட்டி வேண்டும் என்கிறார்களோ, அவர்கள் எழுதிக் கொடுக்க வேண்டும்.

 ஸ்கூட்டி வழங்கும் திட்டம், மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தேர்தலின்போது அறிவித்த திட்டம். ஆனால், அந்த திட்டத்துக்கு இந்த ஆட்சி சல்லிக்காசு கூட ஒதுக்கவில்லை. ஏதோ பெயருக்கு ஓரிரண்டு இடங்களில் கொடுத்திருக்கிறார்கள், நான் மறுக்கவில்லை. ஆனால், அந்த திட்டத்துக்கு இந்த ஆட்சி சல்லிக்காசு கூட ஒதுக்கவில்லை. நிதி ஒதுக்காத சூழ்நிலையில், வாக்காளர்களை எப்படியாவது ஏமாற்றி வாக்குகளை பெற்றிட வேண்டும் என்று இந்த விண்ணப்பம் வீடு விடாக விநியோகிக்கப்படுகிறது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே அதை விநியோகிக்கிறார் என்றால், தேர்தல் ஆணயம் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், நாங்களே கீழே இறங்கி அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். அந்த நிலையை தேர்தல் கமிஷன் ஏற்படுத்தாது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த சூழ்நிலையில்தான், ஆர்.கே.நகரை முறையாக நடத்திட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு சிலர் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். டெபாசிட்டே வாங்க முடியாதவர்கள். வாங்க முடியும் என்பதை நினைத்தே பார்க்க முடியாதவர்கள்.

இன்று காலையில் கூட அறிவாலயத்தில், பத்திரிகையாளர்கள் என்னிடம் கேள்வி கேட்டார்கள். ஆளுங்கட்சியின் சார்பில் பணப் பட்டுவாடா நடந்துக் கொண்டிருக்கிறதே, என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும், கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும், அதி ஓ.பி.எஸ்ஸாக இருந்தாலும் சரி, இ.பி.எஸ்ஸாக இருந்தாலும் சரி, எவ்வளவு குட்டிக்கரணம் போட்டாலும் அவர்களால் டெபாசிட் கூட பெற முடியாது, உருண்டு பிரண்டு வந்தால் கூட, அவர்கள் டெபாசிட் தொகையை பெற முடியாது என்ற அந்த வார்த்தையை சொல்லிவிட்டுதான் வந்திருக்கிறேன்.



இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கின்ற நிலை என்ன? அம்மையார் ஜெயலலைதாவின் மறவுக்கு பிறகு இந்த ‘குதிரை பேர’ ஆட்சியில் தொழில் வளர்ச்சி இல்லை, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணய் இல்லை. இன்னும் கொஞ்ச நாளில் செய்தி வரப் போகிறது, ரேஷன் கடைகளே இல்லை. இதை பற்றி கவலைப்படுகிறதா? கன்னியாகுமரியில் நம்முடைய மீனவச் சமுதாயத்தை சேர்ந்த நண்பர்கள், தோழர்கள், சகோதரர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றன. தாய்மார்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சாலையில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்?

கடந்த 29ம் தேதி, ஒகி புயல் தாக்குகிறது. இப்படியொரு ப்யல் தாக்கவிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையத்தினர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். அப்படியொரு நிலையில் மாநிலத்தில் இருக்கும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமா? வேண்டாமா? அதை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துகிறார்கள். நடத்தட்டும் நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். அதை சொல்வதில் பெருமையடைகிறேன். ஆகவே, எம்.ஜி.ஆரை கொச்சைப்படுத்தி, சிறுமைப்படுத்தி பேசுகிறோம் என்று யாரும் கருதிடக் கூடாது. எந்த சூழ்நிலையில் விழா நடத்துகிறார்கள். மக்களுடைய விரிப் பணத்தை வீண்டிக்கும் வகையில், வாரந்தோறும் இரண்டு விழாக்கள் என்று மாவட்டந்தோறும் சென்று நடத்திக் கொண்டிருக்கிறார்களே, என்ன காரணம்? அப்படி நடத்துகிறபோது, எம்.ஜி.ஆர் புகழை பாடுகிறீர்களா? எம்.ஜி.ஆருடைய பெருமைகளை எடுத்துச் சொல்கிறார்களா? அங்கே சென்று அரசியல் பேசுகிறீர்கள். கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்றைக்கு கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள நிலையைக் கண்டு வேதனைப்படும் நிலையில் அவர்கள் இருக்கிறார்களா? நெடுவாசல் போராட்டம், கதிராமங்களத்தில் போராட்டம் என எங்காவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றதுண்டா? எல்லா கட்சிகளின் தலைவர்களும் அங்கு சென்று ஆறுதல் சொல்லி, கேள்வி கேட்கும் இடத்தில் தான் நாங்கள் இருக்கிறோம். ஆனால், குறைகளை எல்லாம் கேட்டு, நிவர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் இருக்கும் ஆளுங்கட்சியினர் அந்தப் பணிகளில் ஈடுபட்டதுண்டால் என்றால் கிடையாது.

அண்ணன் வைகோ இங்கு குறிப்பிட்டாரே, அதன்படி ஆளுநர் அவர்களின் வேலை என்ன? ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து அரசியல் சட்டத்தை ஆராய்ந்து, அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, மாவட்டங்களுக்கு எல்லாம் சென்று ஆய்வு செய்யும் உரிமையை யார் கொடுத்தது? அதனால் தான், இனி எந்த மாவட்டத்துக்காவது ஆளுநர் ஆய்வு செய்ய செல்கிறார் என்றால், அங்கெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து போராடும் சூழ்நிலை ஏற்படும், அப்படியொரு சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டேன். ஆளுநர் அவர்களுக்கு நாங்கள் மரியாதை தருகிறோம் என்பது வேறு. நாளை மறுநாள் கூட அவரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோமே அது எதற்காக? எங்களுடைய தனிப்பட்ட பிரச்னை காரணமாகவா என்றால் இல்லை. மீனவர் பிரச்னை பற்றி பேசுவதற்காக நேரம் கேட்டிருக்கிறோம்.

கன்னியாகுமரி மீனவர்கள் பாதிக்கப்பட்டால் காசிமேட்டில் உள்ள மீனவர்கள் துடிப்பதற்கு என்ன காரணம்? கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் எல்லாம் இன்றைக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், திராவிட முன்னேற்றக் கழக மீனவரணியின் சார்பில் நாளைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் ஒரு போராட்டத்தை அறிவித்து, அந்த ஆர்ப்பாட்டத்தில் நானும் பங்கேற்கவிருக்கிறேன். ஏற்கனவே நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று, கிட்டதட்ட 38 கிராமப் பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரடியாக பார்த்து, ஆறுதல் தெரிவித்து, அவர்களுடைய பிரச்னைகளை எல்லாம் தொகுத்து, நாளை மறுநாள் ஆளுநர் அவர்களிடம் வழங்கவிருக்கிறோம். விரைவில் டெல்லியில் உள்ள சம்பந்தப்பட்ட அமைச்சரையும் நேரில் சந்தித்து, முழுமையான விவரங்களை கொடுக்க இருக்கிறோம்.

அதன் பிறகும் அவர்கள் மவுனம் காப்பார்கள் என்றால், இங்கு அண்ணன் திருமாவளவன்  சொன்னது போல, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இந்த மேடையில் அமர்ந்திருக்கும் அத்தனை தலைவர்களும் இணைந்து மீனவர்கள் சமுதாயத்திற்காக நிச்சயமாக ஒரு மிகப்பெரிய போராட்டத்தினை நடத்துவோம் என்று உறுதியாக இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கன்னியாகுமரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்களா அல்லது உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாத நிலையிலும் இன்னும் மத்திய - மாநில அரசாங்கங்கள் முறையான கணக்கினை சொல்லவில்லை. புயல் தாக்கிய நேரத்தில் தலைமைச் செயலாளர் அவர்கள் 97 பேரை காணவில்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதையே மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் 97 பேர் காணவில்லை என்று சொன்னார். இரு நாட்கள் கழித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 554 பேர் காணவில்லை என்றார். ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்துக்கு வருகிறீர்களே, உங்கள் கட்சியின் பிரச்னை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை, ஆனால், இந்த அக்கறை கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது உங்களுக்கு ஏன் வரவில்லை? என்று நான் கேட்க விரும்புகிறேன்.

கேரள மாநில முதலமைச்சர் எந்தளவுக்கு தீவிரமாக இதில் செயல்படுகிறார், அதில் நான்கில் ஒரு பங்கு அளவுக்காவது தமிழ்நாட்டில் உள்ள அரசு ஈடுபடுகிறதா? என்றால் கிடையாது. தேசிய பேரிடர் பாதித்த மாவட்டமாக கன்னியாகுமரியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதுகிறார். ஆனால் புயலால் இத்தனை பேர் மாண்டார்கள், இத்தனை பேர் காணாமல் போனார்கள் என்ற புள்ளி விவரத்தை அதில் ஏன் எழுதவில்லை என்று அதில் எழுதவில்லை? அதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள் இங்கு இல்லை. அதிகாரிகளை முறைப்படி வேலை வாங்கும் சக்தியில்லை.

இரு தினங்களுக்கு முன்பாக டைம்ஸ் நவ் என்ற ஆங்கில தொலைக்காட்சியில் சேகர் ரெட்டியின் டைரி பற்றி ஒரு செய்தி வெளியானது. அதில் வெளியான பட்டியலில் மிக முக்கியமான பெரியவர் யாரென்றால் ஓபிஎஸ். பெரியவர் மட்டுமல்ல, அவருடைய பி.ஏ., அவருடைய மருமகன் உள்ளிட்ட பெரியவரின் குடும்பத்துக்கு மட்டும் 7 கோடியே 78 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தி வீக் என்ற ஆங்கில பத்திரிகையில் ஓபிஎஸ்ஸின் சொத்து விவரங்களை எல்லாம் கவர் ஸ்டோரியாக வெளியிட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொள்ளையடிக்கும் ஆட்சியை இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

வருமான வரித்துறையிடம் முதலில் 89 கோடி பணப்பட்டுவாடா செய்த ஆவணங்கள் சிக்கின. பிறகு குட்கா விவகாரத்தில் 40 கோடி சிக்கியது. இப்போது ஓபிஎஸ்ஸின் வண்டவாளங்கள் எல்லாம் சேகர் ரெட்டி மூலமாக சிபிஐ-யிடம் சிக்கியுள்ளது. இதைவிட கொடுமை வேறென்ன வேண்டும்? இப்படிப்பட்ட கொடுமைகளில் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றி, தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவுகாலத்தை ஏற்படுத்த, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு தொடக்கமாக அமைந்துள்ளது.

எனவே, கழக வேட்பாளர் வழக்கறிஞர் மருது கணேஷ் அவர்களுக்கு நீங்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் ஆதரவளித்து, வெற்றியை தந்திட வேண்டும். இங்கு நமது வேட்பாளர் குறிப்பிட்டது உண்மைதான். கடந்த முறை தேர்தல் நடைபெற்றபோது, சென்னை மாநகரின் மேயராக திமுக ஆட்சியின்போது 96 தொடங்கி 5 ஆண்டுகளும், பிறகு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று, நான் இரண்டு முறை என 7 ஆண்டுகள் மேயராக இருந்த காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியைப் பயன்படுத்தி எத்தனையோ திட்டங்களை, எவ்வளவோ சாதனைகளை கொண்டு வந்திருக்கிறோம். அவற்றுக்கு எல்லாம் முத்தாய்ப்பாக சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 10 மேம்பாலங்களை கட்டிய சாதனை நான் மேயராக இருந்தபோது நடந்ததா இல்லையா? டியூப் லைட்டுகள் எல்லாம் மாற்றப்பட்டு சோடியம் விளக்குகள் அமைக்கப்பட்டதா இல்லையா? மாநகராட்சி பள்ளிகள் எல்லாம் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்பட்டதா இல்லையா?

ஆனால், இதே ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 6 முறை அதிமுகவினர் தான் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை தேர்ந்தெடுத்த தொகுதி தான் ஆர்.கே.நகர் தொகுதி. அப்படிப்பட்ட தொகுதி இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறது?

என்னுடைய கொளத்தூர் தொகுதி பக்கத்தில் தான் இருக்கிறது. கூப்பிட்ட குரலுக்கு நான் ஓடி வந்து விடுவேன். எனவே, மருது கணேஷ் மட்டுமல்ல நானும் ஆர்.கே.நகர் தொகுதியின் வேட்பாளர் தான். அதனால் தான் கொளத்தூர் எனது சொந்த பிள்ளை, ஆர்.கே.நகர் எனது தத்து பிள்ளை, வளர்ப்புப் பிள்ளை என்று முன்பே குறிப்பிட்டேன். 2016 தேர்தலின்போதே, இன்றைக்கு திமுக 89 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது என்றால், ஆர்.கே.நகரில் மருது கணேஷ் வெற்றிபெற்று 90 ஆவது சட்டமன்ற உறுப்பினராக அமர்ந்திட வேண்டுமென்று நான் குறிப்பிட்டேன். அதுமட்டுமல்ல, ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்றால் அவர் மக்களோடு மக்களாக இருந்து, இணைந்து பணியாற்றிட வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

கொளத்தூர் தொகுதியில் நான் மீண்டும் வெற்றி பெற்று வந்திருக்கிறேன் என்று சொன்னால், அது நான் ஆற்றிய பணிகள் மக்களின் மனதில் நிற்கும் காரணத்தால் தான். எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கும் நிலை அதுதான். ஆகவே, கழக வேட்பாளர் மருது கணேஷ் அவர்களை நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கும் நேரத்தில், உங்களுக்காக அவர் குரல் கொடுக்கும் நேரங்களில் நாங்களும் அவருக்கு பக்கபலமாக இருப்போம். எனவே, நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சரியாக பணியாற்றவில்லை என்றால் நீங்கள் அடுத்த தேர்தல் வரும் வரை 5 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், இடைத்தேர்தலின் போதும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற உறுப்பினர் முறையாக பணியாற்றவில்லை என்றால், நீங்கள் ஐந்து வருடங்கள் காத்திருக்க வேண்டாம், நாங்களே உரிய நடவடிக்கை எடுப்போம், என்று குறிப்பிட்டேன். காரணம், இதைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.

அதையெல்லாம் மனதில் கொண்டு, எதிர்வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நம்முடைய வெற்றி வேட்பாளர் மருது கணேஷ் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, மாபெரும் வெற்றியைத் தேடித் தர வேண்டுமென்று உங்களை எல்லாம் அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.’’

சார்ந்த செய்திகள்