கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொடநாட்டில் இருந்த சொத்துகள், காணாமல் போன பொருட்கள் குறித்தும், கொடநாட்டில் காணாமல் போனதாக சொல்லப்பட்ட பத்திரங்கள் சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் கிடைத்தது குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 217 பேரிடம் தனிப்படை விசாரணை நடத்தியுள்ள நிலையில் இன்று சசிகலாவிடம் விசாரணை நடைபெற்றது. இன்று சுமார் 6 மணிநேரம் இந்த விசாரணையானது நடைபெற்றது. இந்நிலையில் இது சம்பந்தமாக நாளையும் சசிகலாவிடம் தனிப்படையின் விசாரணை தொடரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று சசிகலாவிடம் நடைபெற்ற விசாரணை எழுத்துபூர்வமாகவும், வீடியோ வாயிலாகவும் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.