கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் வரும் அக்டோபர் மாதம் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு இன்று (02/09/2021) உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரைக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தினர். சயான் தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டிருந்ததையும், கூடுதலாகப் பாதுகாப்பு வழங்கப்பட்டதையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, அரசு தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேல் விசாரணையை முடிக்கக் கால அவகாசம் தேவையெனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதனையேற்ற நீதிமன்றம், கோடநாடு கொள்ளை, கொலை வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு வழக்கில் பல விஷயங்களை முழுமையாகப் புலன் விசாரணை செய்ய வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சதி நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. ஆதாரங்களையும், வாக்கு மூலங்களையும் சேமிக்கிறோம். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசாரிக்கப்படுவர்" எனக் கூறினார்.