நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷாஜி, அனீஸ் என்ற இருவரிடம் மூன்று மணிநேரமாக போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 2 மணிக்குள் கொடநாடு கொலை நிகழ்ந்த போது, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். அதில் இரண்டு பேர் கொண்ட குழு கோவையை நோக்கியும் மற்றவர்கள் கேரளா நோக்கியும் தப்பி சென்றிருக்கின்றனர். அதில் கூடலூரில் பிடிபட்ட குழுவை போலீசார் பிடிக்கின்றனர். ஆனால் சிக்கிய சில மணிநேரத்திலேயே அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் அரசு தரப்பின் 36 ஆவது சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரணம், இந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 ஆவது நபரான ஜிதின் ஜாய் என்பவரின் சித்தப்பா ஷாஜி. கொலை நிகழ்ந்த அன்று கூடலூரில் பிடிபட்ட குழுவில் ஜிதின் ஜாய் இருந்த நிலையில் தன்னுடைய சித்தப்பாவான ஷாஜிக்கு போன் மூலமாக அழைத்து உதவி கேட்டுள்ளார் ஜிதின் ஜாய். அதனைத்தொடர்ந்து ஷாஜி கேரளாவைச் சேர்ந்த சுனில் என்பவரிடம் உதவி கேட்கிறார். அதனையடுத்து சுனில் நேரில் காவல்நிலையம் சென்று பிடித்துவைக்கப்பட்டவர்களை விடுவிக்கின்றார். இந்த நிகழ்வில் உதவிக்கு அழைத்தபொழுது ஜிதின் ஜாய் மற்றும் ஷாஜி ஆகிய இருவரும் பேசிக்கொள்ளும் செல்போன் உரையாடல் போலீசார் வசம் சிக்கியுள்ளது. சுனில் நேரில் சென்று பிடித்துவைக்கப்பட்டவர்களை விடுவித்தபோது சுனிலுடன் சென்றவர் அனீஸ். எனவே அன்று என்ன நிகழ்ந்தது. எதற்காக சிபாரிசின் பேரில் போலீசார் அந்த கும்பலை விடுவித்தனர் என்பது தொடர்பாக அனீஸ் மற்றும் ஷாஜியிடம் மூன்று மணிநேரமாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.