மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று (27/08/2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சயான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அதைத் தொடர்ந்து, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 2- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் கீழமை நீதிமன்ற வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உள்ள வழக்கின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம்" என்றார்.
இதனிடையே, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் விசாரணைக்கு காவல்துறை சாட்சியாக உள்ளவரும், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவருமான ரவி என்பவர் வழக்கு விசாரணைக்கு தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதேபோல், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் வழக்கு விசாரணை விரிவுபடுத்த வேண்டும் என்று நீதிபதியிடம் கடிதம் கொடுத்துள்ளதாக அரசு தரப்பு தனது வாதத்தை முன் வைத்துள்ளது. இந்த நிலையில் அரசு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்றம், இன்று (27/08/2021) வழக்கு தொடர்பாக உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்த வழக்கு இன்று (27/08/2021) உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக, உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வாய்ப்புள்ளது.