சென்னையிலிருந்து கொடைக்கானல் வந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் ஆனந்த கிரியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி இங்கு உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். கரோனா மூலம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சென்னையில் தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுக்கான ஹால் டிக்கெட் அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியானதால் மீண்டும் கொடைக்கானலுக்கு சென்னையிலிருந்து தனது தாயையும் கூட்டிக்கொண்டு கார் மூலம் வந்தார்.
அப்பொழுது திண்டுக்கல் மாவட்ட எல்லையான அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டி சோதனை சாவடியில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அந்த மாணவியை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அதோடு கொடைக்கானல் சென்றதும் அந்த மாணவியை தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்க மருத்துவ குழுவினர் வந்தனர். அவரது தாய் மற்றும் காரை ஓட்டி வந்த டிரைவர் ஆகியோருக்கு கரோனா தொற்று இல்லாததால் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவியின் வீடு அமைந்துள்ள ஆனந்தகிரி பகுதியில் சீல் வைத்து அடைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கபட்டது. இப்படி திடீரென கொடைக்கானலை சேர்ந்த பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று உறுதியானதின் மூலம் கோடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.