'எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கூடிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக அரசு திறந்துள்ளது பாராட்டுக்குரியது' என உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோயம்பேடுக்கு மாற்றாக கிளம்பாக்கத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்திலிருந்து இயக்க எதிர்ப்பு தெரிவித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆம்னி பேருந்துகள் தரப்பைச் சார்ந்த வழக்கறிஞர், 'கோயம்பேட்டில் உள்ள தங்களது இடத்தில் பேருந்துகளை நிறுத்தி வைக்க அனுமதிக்க வேண்டும். மீண்டும் கிளம்பாக்கத்திற்கு செல்லும்போது குறிப்பிட்ட இடத்தில் பயணிகளை ஏற்றிக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர், 'கோரிக்கைகள் குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உணவகம், பெண்களுக்கான பிரத்தியேக வசதிகள், இலவச மருந்தகம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது. தூரத்தை தவிர வேறு எந்த அசவுகரியமும் இல்லை என விளக்கம் அளித்தார். இந்த பிரச்சனையில் சுமூகமாக தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 'எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்திருக்கும் தமிழக அரசின் செயலுக்கு பாராட்டு. எந்த திட்டங்கள் வந்தாலும் அதில் சில குறைபாடுகள் இருப்பது சகஜம். தவிர்க்க முடியாது' என்ற கருத்தையும் நீதிபதி மஞ்சுளா பதிவு செய்தார்.