
ரத யாத்திரை என்ற பெயரில் நடக்கும் ரத்த யாத்திரை இது. இதை அ.தி.மு.க அனுமதித்திருக்கவே கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது,
தமிழகம் சாதி, மதம், பேதம் கடந்த பெரியார் பூமியாக, நல்லிணக்க மாநிலமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் வேறு எந்த வகையிலும் காலூன்ற முடியாத ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க இது போன்று ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதத்தை கொண்டுவர திட்டமிடுகிறது. ரத யாத்திரை என்ற பெயரில் நடக்கும் ரத்த யாத்திரை இது. இதை அ.தி.மு.க அனுமதித்திருக்கவே கூடாது.
அனுமதித்தது மட்டுமல்லாமல் ரத யாத்திரை தமிழகத்தில் வேண்டாம் என்று போராடுபவர்கள் மீது 144 தடை விதித்துள்ளது, அதாவது தீ வைக்க வந்தவர்களுக்கு பாதுகாப்பும், தீயை அணைக்க முன்வருபவர்களை கைது செய்கிற மாதிரியான ஒரு வேடிக்கையைதான் நிகழ்த்துகிறது மாநில அரசு. இதனால் சட்டஒழுங்கு சீர்கேடு ஏற்படும் என சிந்திக்க தெரியாத அரசாக உள்ளது. இதன் பலனை கண்டிப்பாக இந்த அரசு அனுபவிக்கும் மக்கள் இந்த அரசிற்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரத்தில் பாடம் கற்பிப்பார்கள்.
ரத யாத்திரையை மற்ற மாநிலங்கள் ஒத்துழைப்பது என்பது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். அரசியல் காரணங்களுக்காகக் கூட சம்மதித்திருக்கலாம். ஆனால் இங்கு அதற்கு வாய்ப்பில்லை. தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தி.மு.க செய்ததை இவர்கள் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் ஏன் இன்று தடுக்கவில்லை? அதுதான் இன்று எங்களின் கேள்வி.
அவர்கள் (தி.மு.க) அப்படி செய்ததால் தானே மக்கள் அவர்களை நிராகரித்து இவர்களை தேர்ந்தெடுத்தனர். எனவே அவர்களை சுட்டிக்காட்டும் பதில் எங்களுக்கு தேவையில்லை நீங்கள் ஏன் செய்தீர்கள்? அதுதான் மக்களின் கேள்வி. இன்று நடக்கும் இந்த எதிர்ப்பின் மூலமாகவே அவர்கள் அதை புரிந்துகொள்ள வேண்டும் எனக்கூறினார்.