ஈரோடு மாவட்டத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே அமைச்சர் முத்துசாமி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது அவ்வாறு அமைத்தால் நிலத்தடி நீர் மட்டம் குறையும் என்று விவசாயிகளில் ஒரு தரப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட கோரி பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஈரோடு ஆர்டிஓ சதீஷ்குமார், தாசில்தார் பூபதி ஆகியோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை ஒன்றியம் திருவாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கூரபாளையம் பிரிவு ஈரோடு ரோட்டில், கீழ்பாவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி 26 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். இன்று மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியை சேர்ந்த மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யமூர்த்தி, மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த போராட்டத்திற்கு தனியார் கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.