கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்வதில் இரு கும்பல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருவர் வெட்டப்பட்டு படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் மேட்டுப்பாளையம், அன்னூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த கும்பல்கள் தொடர்ந்து அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, மேட்டுப்பாளையத்தில் 15.200 கிலோ கஞ்சாவினைப் பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். அதேபோல் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 5.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர், மேட்டுப்பாளையத்தில் 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்பனை கும்பல்களைப் பிடிக்க அதிரடி வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள ஊமப்பாளையம் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர்கள் தாமோதரன், செல்வநாயகம் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் (45), சண்முகம் (36) மற்றும் வேடர் காலனியைச் சேர்ந்த நாகார்ஜூன் (20) உள்ளிட்டோரை சோதனை செய்தனர். அவர்களிடம் 1.200 கிலோ கஞ்சா இருப்பதைக் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரித்தபோது விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைதுசெய்து, அவர்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவினைப் பறிமுதல் செய்தனர். மேலும், எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள சுடுகாடு அருகில் கஞ்சா விற்பனை செய்த மன்சூர் (30) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 700 கிராம் கஞ்சாவினையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்யும் மேட்டுப்பாளையம் போலீசார், அவர்களிடமிருந்து கஞ்சாவினையும் பறிமுதல் செய்துவரும் சம்பவங்களால் மேட்டுப்பாளையம் கஞ்சாப் பாளையமாக மாறி நிற்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.