திருச்சி ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று திருச்சி ரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயில்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தஞ்சையில் இருந்து வந்த ரயிலில், உதவி ஆய்வாளர் வீரக்குமார், தலைமை காவலர் அய்யல்ராஜ், காவலர் மோகன்ராஜ் உள்ளிட்ட காவலர்கள், அந்த ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் சோதனை செய்தனர். அப்போது, எஸ்1 பெட்டியில் உள்ள கழிவறைக்கு முன்பு கேட்பாரற்று கிடந்த ஒரு பையை கைப்பற்றினர். அந்த பையை தேடி யாரும் வராத நிலையில், அதனை சோதனை செய்தனர். அந்தச் சோதனையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் 16.500 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கிருஷ்ணமூர்த்தி(49), குப்பனார்பட்டி, பெரியபட்டி என்று விலாசமும் எழுதி ஒட்டியிருந்தது தெரியவந்தது. அந்த பையில் சுமார் 56 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல், இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட வாராணசி விரைவு ரயில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்தபோது, அந்த ரயிலில் பயணம் செய்த பயணியிடம் இருந்த வந்த தகவலின் அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பவுடர் வடிவில் ஒரு பெட்டிக்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பரிசோதித்தபோது சுமார் 26 கிலோ எடை கொண்ட புகையிலை பவுடர் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவற்றை ரயில்வே பாதுகாப்பு படையினர் அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.