Skip to main content

மது அருந்திய 2 நண்பர்கள் பலி விஷம் கலந்ததா?. போலீஸ் விசாரணை

Published on 31/08/2017 | Edited on 31/08/2017

மது அருந்திய 2 நண்பர்கள் பலி
விஷம் கலந்ததா?. போலீஸ் விசாரணை



நெல்லை அருகே களக்காடு சமீபம் ஒன்றாக சரக்கடித்த இரண்டு தொழிலாள நண்பர்கள் பலியானது பரபரப்பு சூட்டைக் கிளப்பியுள்ளது. நெல்லை மாவட்டத்தின் களக்காடு பக்கம் உள்ள கீழ உப்பூரணியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான இன்பமணி, திருமணமானவர். லட்சுமி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். அந்தப் பகுதியின் கட்டிடத் தொழிலாளியான தங்கராஜ் அவரது நண்பர். 

கடந்த 24ம் தேதி அன்று தங்கராஜின் வீட்டிற்கு வந்த இன்பமணி, தன்னிடம் மது பாட்டில் இருப்பதால்,இரண்டு பேரும் சேர்ந்தே அருந்தலாம் என்று சொல்லி தங்கராஜை அழைக்க, இதையடுத்து நண்பர்கள் இரண்டுபேரும், ஊருக்கு வெளியேயுள்ள ஊரணிப்பக்கமாகச் சென்றமர்ந்து இருவரும் ஒன்றாகவே மதுவைக் குடித்து விட்டு தங்களின் வீடு திரும்பியுள்ளனர். வந்த சிறிது நேரத்திலேயே இருவரும் மயங்கிச் சுருண்டு விழுந்துள்ளனர்.

பதறிப் போன உறவினர்கள் அவர்கள் இருவரையும், அருகில் உள்ள கங்கணான்குளம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பின் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு அதன் பின் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி இன்பமணி, நேற்று முன்தின இரவில் உயிரிழந்தார். இதனிடையே தங்கராஜை அவரது உறவினர்கள் ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்க, அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் திகிலையும் பீதியையும் கிளப்பியிருக்கிறது.

இன்பமணி ஒரு நாளுக்கு முன்னதாகவே மதுபாட்டிலை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார். அவரைக் கொலை செய்வதற்காக யாராவது அதில் விஷம் கலந்திருக்க வேண்டும் அது தெரியாமல் அவர் தங்கராஜையும் அழைத்துக் கொண்டு வந்து மது அருந்தியிருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்துள்ளனர். கீழ உப்பூரணி அருகே உள்ள வடுவூர்பட்டியில் இரு மாதங்களுக்கு முன்பு தான் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியினர் அங்கு தான் மது வாங்கி அருந்துகின்றனர். 

இன்பமணியும் அங்கு தான் வாங்;கியிருக்க வேண்டும். அது போலியாக இருந்து உட்கொண்டதால் மரணமா?. அல்லது அவர்களது உறவினர்கள் கூறியது போல் மதுவில் விஷம் கலந்து அவர்கள் கொல்லப்பட்டார்களா. என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தும் போலீசார். உடற்கூறு ஆய்விற்குப் பின்பு அவர்களின் உடற்பாகங்களைவ விஸ்ரா சோதனைச் செய்த பிறகே விஷம் கலந்துள்ளதா..! அது எந்த வகை விஷம் என்பது தெரியவரும் என்கிறார்கள் புலனாய்விலிருக்கும் போலீசார். ஆனாலும் நண்பர்களின் சாவிற்கு மூல காரணம் மது என்பது தான் ஏரியாவைக் கலக்கி வருகிறது.

-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்