நாமக்கல் அருகே 11 வயது சிறுமி வீடு புகுந்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உறவினர்களே கடன் பிரச்சனையால் ஏற்பட்ட முன்விரோதத்தால் சிறுமியை கடத்தியது தெரியவந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். சரவணன் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் ஒரு மகள் உள்ளார். சரவணன் பணிக்குச் சென்ற நிலையில் அவரது மனைவியும் மகளும் நேற்று முன்தினம் மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் சரவணனின் மனைவி கவுசல்யா மற்றும் அவரது 11 வயது மகளை மிரட்டி நகைகளைப் பறித்ததாகக் கூறப்படுகிறது.
இருவரையும் கட்டிப்போட்ட அந்த மர்ம நபர்கள் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகளை கடத்தி சென்றுள்ளனர். அதன்பின் சிறுமியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்ட அந்த மர்ம நபர்கள் குழந்தையை விடுவிக்க வேண்டுமென்றால் 50 லட்சம் ரூபாய் தயார் செய்து வைக்கும்படி மிரட்டல் விடுத்ததாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து சரவணன்-கௌசல்யா காவல்துறையிடம் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரிக்க 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சிறுமியை கத்தி முனையில் கடத்தியது அவர்களின் உறவினர்கள் என்பது தெரியவந்துள்ளது. அந்த கும்பல் அலங்காநத்தம் பிரிவில் உள்ள பெட்ரோல் பங்கில் சிறுமியை விட்டுவிட்டு மீண்டும் கௌசல்யாவை தொடர்புகொண்டு தகவலை சொல்லி விட்டுச் சென்றுள்ளது. அதன்பிறகு போலீசார் சிறுமியை மீட்டு நிலையில் கடத்தலில் ஈடுபட்டது. கௌசல்யாவின் உறவினர்களான மணிகண்டன்-பொன்னுமணி என்பது தெரியவந்தது. மணிகண்டன்-பொன்னுமணி தம்பதியினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணனிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். உரிய தேதியில் பணத்தைத் திருப்பித் தராததால் கௌசல்யாவும் சரவணனும் அவர்களிடம் பணத்தை திரும்ப திரும்ப கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அந்த ஆத்திரத்தில் அவர்களது மகளை கடத்தியதாக தம்பதிகள் போலீசார் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்கள்.