கீரமங்கலம் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள் 15 வயது சிறுமி. இவர் கடந்த மாதம் ஜூன் 4 ந் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை. பெற்றோர்களும் உறவினர்களும் எங்கு தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், கொத்தக்கோட்டை அம்மயன்புரம் கிராமத்தைச் சேர்ந்த அரங்குளவன் மகன் காமராஜ் (வயது 24) மற்றும் அவரது நண்பன் கோவிலூர் சம்பாமனை சங்கர் மகன் முருகேசன் (23) ஆகிய இருவரும் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்து பழுதான ஒரு மோட்டார் சைக்கிளை புதருக்குள் போட்டுவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சிறுமியை கடத்தி கொண்டு சென்றுள்ளனர் என்று அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கீரமங்கலம் போலீசார் சிறுமியை கடத்திய வாலிபர்களின் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் செல்போன் எண்களை ஆய்வு செய்து தலைமறைவாக உள்ள சிறுமி மற்றும் 2 வாலிபர்களையும் தேடி வந்தனர். அவர்களது செல்போன் சிக்னல்கள் கிடைக்காமல் திணறிய போலீசார் அடுத்தடுத்த முயற்சிகள் செய்துள்ளனர். கடத்தப்பட்ட சிறுமி கோவையில் இருப்பது பற்றிய தகவல் கிடைத்து காவல் உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் கீரமங்கலம் காவல் நிலைய தலைமைக் காவலர் கணபதி தலைமையிலான போலீசார் கோவைக்கு சென்று சிறுமி மற்றும் அவரை கடத்தி சென்ற காமராஜ் ஆகியோரை மீட்டு கீரமங்கலம் கொண்டு வந்துள்ளனர்.
15 வயது சிறுமி கடத்தப்பட்டு 30 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டதால் உறவினர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.