
விழுப்புரம் மாவட்டம், சித்தேரிகரை பகுதியைச் சேர்ந்த ஷமிலுதீன்(34) லாரி டிரைவராக வேலை செய்துவருகிறார். இவரது இரண்டு வயது மகள் நசீபா நேற்று முன்தினம் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நசீபாவின் உறவினர்கள் விழுப்புரம் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் சிறுமி நசீபா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து நசீமாவின் இறப்பை கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஷமிலிதூனின் இரண்டாவது மனைவி அப்ஷனாவை போலீஸார் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
அந்த விசாரணையில், சிறுமி நசீபாவை கொலை செய்ததாக அப்ஷனா ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் விசாரணையில், நசீபாவின் தந்தை ஷமிலிதீன், நஸிரீன் என்ற பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி அவருக்கு குழந்தை பிறக்கும் போது உயிரிழந்துள்ளார். அவருக்குப் பிறந்த பெண் குழந்தைதான் நஷீபா. இந்த நிலையில், பெற்றோர்கள் உறவினர்கள் வற்புறுத்தி ஷமிலுதீனுக்கு அப்சனாசனாவை இரண்டாவது தாரமாக 2019ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஷமிலிதீன், பெங்களூருக்கு அடிக்கடி காய்கறி லோடு ஏற்றி செல்வார். இதனால் இவர் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை. இரண்டாவது மனைவி அப்சனா, திருமணத்தின் போது முதல் மனைவியின் குழந்தை நசீபாவை தனது குழந்தை போல் வளர்ப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால், அப்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்த பிறகு முதல் மனைவியின் குழந்தை மீது வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தார். இந்த நிலையில், கடந்த 16ம் தேதி ஷமிலிதீன் காலை நேரத்தில் வேலைக்குச் சென்று விட்டார். அப்போது குழந்தை நசீபா தண்ணீர் கேட்டு அடம் பிடித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அப்சனா, குழந்தையின் வாயையும் மூக்கையும் பொத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். குழந்தை இறந்ததை உறுதி செய்த பின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் நசீபா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் போல் நடித்துள்ளார். அக்கம்பக்கத்தினரிடம் குழந்தை சமையல் அறைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றபோது வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார். அவரிடம் மேற்கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.