பாதுகாக்கப்பட வேண்டிய தேசியப் பறவையான மயில்கள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவது அதிர வைத்திருக்கிறது.
மந்த மாருத மேக மூட்டங்களைக் கண்டாலே தன் தோகையை விரித்து ஆடத் தொடங்கிவிடும் மயிலினங்கள். காண்பதற்குக் கண் கோடி வேண்டும். பார்த்த யாரையும் தன் தோகை விரிப்பாலேயே கிறங்க வைத்துவிடும். அப்படிப்பட்ட மயிலினங்கள் நம் தேசியப்பறவை. முதன்மையிடத்திலிருக்கிறது. பாதுகாக்கப்பட வேண்டிய பறவை இனங்கள்.
கேரளாவின் பாலக்காடு வனப்பகுதியில் 15 வயதுடைய கர்ப்பிணி யானை, தேங்காய் வெடி குண்டைத் தன் கருவில் வளரும் சிசுவைக் காப்பாற்ற பசியால் உண்ணப் போக, வெடி பொருள் வெடித்து வாய் சிதறி மடிந்த கோரத்தைக் கண்டிக்காத நெஞ்சமில்லை. அதே சமயம், கேரள வனப்பகுதில் வன விலங்குகள் பாதுகாப்பட வேண்டும் என்ற கண்டிப்பில் கேரள வனப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ள வனத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் பினராய் விஜயன்.
இந்தச் சூழலில் தமிழக எல்லையை ஒட்டி அமைந்துள்ள கேரளாவின் தென்மலை செந்தூரணி வனவிலங்கு வார்டன் சதீஷ்குமார் மற்றும் ரேஞ்சர் சஜூட்ஸ் போன்ற அதிகாரிகள் அந்த வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அது சமயம் கேரளாவின் ராணிப் பகுதியின் சென்ஜேம்ஸ் (34) தொடுபுழா நகரின் சிஜோஜாய் (42) ஆலப்புழா ஷாஜி (53) ஆகிய மூவரும் சரணாலயத்தில் அமைந்துள்ள ராக்வுட் தோட்டத்தில் மயில்களை வேட்டையாடி அவற்றின் இறைச்சிகளை சேமித்து வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது. மேற்படி நபர்கள் மூவரையும் கைது செய்து மயில்கறியை கைப்பற்றிய வனத்துறை அதிகாரிகள், அவர்களிடமிருந்து உரிமம் இல்லாத மூன்று துப்பாக்கிகள் மற்றும் 4 ஏர்கன்கள் மற்றும் அவர்களின் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்ததுடன் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வனப்பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார் மாவட்ட வனப் பாதுகாப்பு அதிகாரி. தேசிய பறவையான மயில்களை வேட்டையாடுவது கொடிய கிரிமினல் குற்றம் என்பது சட்ட விதி.