![Kerala youth threatened the bar staff and bought alcohol in Coimbatore](http://image.nakkheeran.in/cdn/farfuture/HG2a_sdFbBHGMHD4Z4c-4jVwPGR0QwoOUuV3P_VFq58/1702720773/sites/default/files/inline-images/Untitled-1_506.jpg)
கோவை மாவட்டம், கேரளா செல்லும் வழியில் அமைந்துள்ளது எட்டிமடை கிராமம். இந்தப் பகுதியில் உள்ள சாலையில், சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு காடுகள் சூழ்ந்திருக்கும். இந்தக் காட்டுப்பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே பார் ஒன்றும் உள்ளது. காட்டுப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் பார் என்றாலும், பகல் நேரத்தில் இந்தச் சாலை வழியாக செல்லும் பயணிகளும், மது பிரியர்களும் ஏராளமாக வந்து செல்வார்கள். இதன் காரணமாக இந்த பாரில் எப்போதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். இரவு பத்து மணிக்கு சாத்தப்படும் இந்தப் பாரில், வேலை செய்யும் பணியாளர்களுக்கு அதன் அருகிலேயே தங்கிக்கொள்ள அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாரில் வேலை செய்த சில ஊழியர்கள் வேலை முடிந்த பிறகு தங்களின் அறைக்குச் சென்று தூங்கியுள்ளனர். அப்போது அதிகாலை சுமார் 3 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், பாரின் கதவினை தட்டியுள்ளனர். அப்போது பாருக்குள் யாரும் இல்லாத காரணத்தால் அதன் கதவுகள் திறக்கப்படவில்லை. அதன் பின்னர் பாருக்கு பின் புறம் சென்று, அங்கிருந்த அறையின் கதவினை தட்டியுள்ளனர். ஆனால், ஊழியர்கள் அனைவரும் நல்ல அசதியில் உறங்கியதால் அந்தக் கதவினை யாரும் திறக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மர்ம கும்பல், தொடர்ந்து அந்த அறையின் கதவினை வேகமாக தட்டியுள்ளனர்.
பின்னர், ஒரு வழியாக அந்த அறையின் ஜன்னல் ஒன்று திறந்துள்ளது. அப்போது அறையின் உள்ளே இருந்தபடி ஊழியர் ஒருவர், என்ன வேணும் உங்களுக்கு?.. எனக் கேள்வி எழுப்பியுள்ளார். உடனே வெளியே நின்ற 3 பேர் அடங்கிய மர்ம கும்பல், தங்களுக்கு மதுபானம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனைக் கேட்ட பார் ஊழியர், ரூம்ல எதுவும் இல்லைங்க... எனவும், காலையில் டாஸ்மாக் கடை திறந்தபிறகு மட்டும்தான் மதுபானம் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அந்த ஊழியரின் பேச்சை கண்டுகொள்ளாத மர்ம நபர்கள் அங்கேயே நின்றுகொண்டு ஏய்.. மதுபாட்டில் இல்லாமல் இருக்காது.. உடனே எடுத்து வா... என மிரட்டும் தொணியில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பார் ஊழியர், கதவை வேகமாக திறந்து, பாரில் மதுவகைகள் எதுவும் இல்லை எனச் சத்தமாக கூறியுள்ளார்.
இந்த வார்த்தையைக் கேட்டதும், கோபத்தின் உச்சத்திற்கே சென்ற மர்ம நபர் ஒருவர், யாரும் எதிர்பாராத நேரத்தில் சட்டென்று தன் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்து, டேய்... ஒழுங்கா சரக்கு பாட்டில் எடுத்து வா.. இல்ல போட்டுத்தள்ளிடுவோம்.. என மிரட்டியுள்ளார். நடு ராத்திரியில் துப்பாக்கியைக் காட்டியதும் நடுங்கிப் போன ஊழியர், உடனே ஒடிச்சென்று, பாரைத் திறந்து அங்கிருந்த மதுபாட்டில்கள் சிலவற்றை எடுத்துக்கொடுத்துள்ளார். அதுவரை ஆத்திரத்தோடு வெளியே நின்ற மூன்று பேரும், மதுபாட்டில்கள் கிடைத்ததும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதுவரை செய்வதறியாது தவித்து நின்ற பார் ஊழியர்கள், அவர்கள் சென்றதும், உடனே இது குறித்து அவர்களின் முதலாளிக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பார் உரிமையாளர், ஊழியர்களையும் அழைத்துச் சென்று க.க.சாவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இது குறித்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கியை காட்டி, மது வாங்கிச்சென்ற மூன்று பேரின் அங்க அடையாளங்களை வைத்து யார் என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில், துப்பாக்கியைக் காட்டிய மர்ம நபர்கள் மூவரும், கேரள மாநிலம் கொழிஞ்சாம் பாறையைச் சேர்ந்த விபின், சதீஷ் மற்றும் அர்ஜுன் என்பதை உறுதிசெய்துள்ளனர்.
இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று விசாரித்த போது, அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கி, பறவைகளை விரட்ட பயன்படுத்தும் ஏர் கன் வகையைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நள்ளிரவில் டாஸ்மாக் பார் ஊழியர்களிடம் துப்பாக்கியைக் காட்டி, மது வாங்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.