கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதிக்கு அருகே அமைந்துள்ளது அருமனை ஊராட்சி. இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அருமனை சுற்றுவட்டார பகுதிகளில் ஒருசில பன்றி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அத்தகைய பண்ணைகளை அகற்றக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பல்வேறு விதமாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழகத்தில் குமரி உட்பட பல்வேறு பகுதிகளில் கோழி இறைச்சிகள் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவற்றை சட்டவிரோதமாக கொட்டிவிட்டுச் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில், சுகாதாரமற்ற முறையில் கிடக்கும் இத்தகைய கழிவுகளால் அப்பகுதிச் சேர்ந்த மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. மேலும், இத்தகைய கழிவுப் பொருட்கள் கேரளாவிலிருந்து வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில், கடந்த 9 ஆம் தேதி காலை களியல் வழியாக படப்பச்சை பகுதிக்கு பல்வேறு கழிவுகளை ஏற்றிவந்த லாரி ஒன்று, அந்த வழியாக வேகமாக சென்றுகொண்டிருந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியுள்ளது. ஒருகட்டத்தில், சந்தேகமடைந்த பொதுமக்கள் அந்த லாரியை விரட்டிச் சென்றனர். இதையடுத்து, அவர்கள் ஒன்றுசேர்ந்து குஞ்சாலுவிளை பகுதியில் வைத்து அந்த லாரியை சுற்றி வளைத்தனர். அதே நேரம், அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்ததால் அந்த லாரியை ஓட்டிவந்த டிரைவர் திடீரென கீழே இறங்கி தப்பித்துச் சென்றுவிட்டார்.
அதன்பிறகு, இச்சம்பவம் குறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த லாரியை சோதனையிட்ட போது அதில் இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள் மற்றும் பல்வேறு விதமான மருத்துவ கழிவுகளும் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் இந்த விவகாரம் குறித்து, அருமனை பேரூராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். மேலும், அந்த லாரியை பறிமுதல் செய்து பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தற்போது, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அருமனை போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், தமிழக எல்லைகளில் தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.