கேரளாவில் கடந்த மாதம் 28 ந் தேதி திங்கள் கிழமை அதிகாலை அமைதி பள்ளத்தாக்கு காட்டுக்குள் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் சேலம் மாணிவாசகத்தை அடையாளம் காட்ட திருச்சி சிறையில் இருக்கும் அவரது மனைவி கலா மற்றும் அவரது அக்கா சந்திராவை பரோலில் அனுப்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கலும் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தான் சுட்டுக்கொல்லப்பட்ட மற்றொருவர் கார்த்திக் என்று கூறப்பட்டது. கார்த்திக் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி- காரைக்குடி சாலையில் உள்ள கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து- மீனா தம்பதிகளின் இளைய மகன் என்பது தெரிய வந்தது.
கண்ணன் (எ) கார்த்திக் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இளம் வயதிலேயே தந்தையின் கொள்கையால் தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருந்து டைஃபி கிளையையும் தொடங்கி 3 வருடம் செயலாளராக இருந்துள்ளார். அதன் பிறகு காவிரிப் பிரச்சணையில் கம்யூனிஸ்ட்களின் முடிவில் திருப்தி இல்லாததால் அதிலிருந்து விலகி, பொதுப் பிரச்சணைகளில் பங்கெடுத்து தீர்த்து வைத்தார். பல முறை ரத்த தானம் முகாம் நடத்தியவர்.
2006 ம் ஆண்டு திருப்பூர் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற போது 2007 ல் 6 மாவோயிஸ்டுகளுடன் சேர்த்து கைது செய்யப்பட்டு 3 வருடம் சிறை வாசம். ஒரிசா வரை அழைத்துச் செல்லப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார். நிபந்தனை ஜாமின் கையெழுத்து போட சென்னையில் அனுமதிக்க வேண்டும் என்று குடும்பத்தினர் கேட்ட போது தேனி, திண்டுக்கல் என்று அனுமதி அளிக்கப்பட்டது. அப்போதே அவரது முடிவுகள் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துவிட்டேன். இனி அப்படியே மாறிவிடுகிறேன் என்று மாவேயிஸ்ட்களுடன் சென்றுவிட்டார். அதன் பிறகு அதாவது 2010க்கு பிறகு குடும்பத்தினருடன் தொடர்புகள் இல்லை.
அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் குடும்பம் புதுக்கோட்டை மாவடத்தில் சொந்த ஊருக்கு குடிபெயர்ந்தனர். இந்த நிலையில் தான் தற்போது கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது. தகவல் அறிந்து தாய் மீனா, அண்ணன் முருகேசன் ஆகியோர் கேரளா சென்று சடலத்தை அடையாளம் காண சென்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். நீதிமன்றம் உத்தரவை பெற்ற சடலத்தை அண்ணன் முருகேசன் மட்டும் பார்த்தவர் உடல் சிதைந்துள்ளது அதனால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறினார். அதனால் அடுத்தடுத்து 3 முறை நீதிமன்ற உத்தரவால் 12 ந் தேதி வரை சடலத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரனைக்கு போய் உள்ளது.
இந்த நிலையில் தான் சேலம் மணிவாசகம் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய தேவையான பாதுகாப்புகளை நீதிமன்றம் மூலம் பெற்றுள்ளனர். ஆனால் ஒரு சிலர் சொந்த ஊருக்கு கொண்டு வர அனுமதிக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தன்ர்.
அதே போல கண்ணன் (எ) கார்த்திக் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் கேரளாவில் திருச்சூரிலேயே தகனம் செய்யும் முடிவில் உறவினர்கள் சென்றனர். ஆனால் கேரள அதிகாரிகள் அங்கு உடல் தகனம் செய்ய அனுமதிக்காமல் சொந்த ஊரில் தகனம் செய்ய பாதுகாப்பு தருவதாக கூறினார்கள். ஆனால் சொந்த ஊரில் தகனம் செய்ய பிரச்சனைகள் வரலாம் என்பதால் திருச்சி மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்வோம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு புதுக்கோட்டையில் தகவம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கேட்ட போது புதுக்கோட்டையில் மின் மயானம் இருந்த போதிலும் அங்கே மின் மயானம் இல்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டு திருச்சியில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறினார்கள். அதனை ஏற்றுக் கொண்டனர் உறவினர்கள். ஆனால் திருச்சி வேண்டாம் கோவையில் தகனம் செய்யலாம் என்றும் அதிகாரிகள் சடலத்தை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டுள்ளனர். வியாழக்கிழமை (14/11/2019) அதிகாலை மாவோயிஸ்ட் கண்ணன் (எ) கார்த்திக் உடல் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சியா? கோவையா, புதுக்கோட்டையா? அல்லது வேறு இடமா என்பது அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும்.