இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கேரளாவில் கடந்த செவ்வாய் கிழமை முதல் அரசு மற்றும் தனியார் மதுபானக்கடைகள் மூடப்பட்டது. இதனால் கடந்த புதன்கிழமை முதல் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் மது வாங்க தமிழக-கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் கன்னுமாமூடு பகுதியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாளை தமிழகத்தில் மதுபானக்கடைகளுக்கு விடுமுறை என்பதாலும், அதேபோல் நாளை மறுநாளான ஞாயிற்று கிழமை சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் கரோனா முழுமுடக்கம் அமலில் இருக்கும் எனவே மதுக்கடைகள் மூடியிருக்கும் என்பதால் இன்று காலை முதலே தமிழக எல்லைகளில் கேரளாவில் இருந்து மது வாங்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தற்பொழுது மாலை நேரம் என்பதால் தற்பொழுது கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.