தர்மபுரி அருகே, சொத்துக்காகக் குடிபோதையில் தாய், தந்தையை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள இண்டூர் பூச்சட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவருடைய மனைவி சின்னராஜி (60). இவர்களுடைய மகன் ராமசாமி (40). இருசக்கர வாகன மெக்கானிக். சரிவர வேலைக்குப் போகாமல் இருந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராமசாமிக்கும் அவருடைய பெற்றோருக்கும் இடையே கடந்த சில ஆண்டாகச் சொத்துத் தகராறு இருந்துவருகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 5) இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு வந்திருந்த ராமசாமி, தனக்குச் சேர வேண்டிய பாகத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி பெற்றோரிடம் கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதற்குப் பெற்றோர் மறுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த ராமசாமி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கீழே கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து, பெற்றோரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தாய், தந்தை இருவரும் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொஞ்சம் நேரம் கழித்துப் போதை தெளிந்துள்ளது. கோபத்தில் பெற்றோரை அடித்துக் கொன்று விட்டோமே எனப் பதற்றம் அடைந்த ராமசாமி, இண்டூர் காவல் நிலையத்திற்கு அவராகவே நேரில் சென்று, பெற்றோரை கொன்று விட்டதாகக் கூறி சரணடைந்தார்.
இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராமசாமியையும் கைது செய்தனர். சொத்துக்காக குடிபோதையில் தாய், தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் இண்டூர் பூச்சட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.