கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழகடம்பூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த அரிசியில் சில அரிசி மணிகள் சுண்ணாம்புக்கட்டி போன்ற அடர்வெள்ளை நிறத்தில் பளிச்சென்று இருந்தன. இதனை பொதுமக்கள் வாங்கிச் சென்று சமைக்க கழுவும்போது தண்ணீரில் மிதந்துள்ளன. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என அனைவரும் ஒன்றுகூடி ரேஷன் கடையை முற்றுகையிட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் தமிழ்செல்வன், வட்ட வழங்கல் அலுவலர் அன்புராஜ் ஆகியோர் ரேஷன் பொருட்களை ஆய்வு செய்தனர். பின்னர் சில அரிசி மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினர். இதையடுத்து அந்த அரிசிக்கு பதிலாக பொதுமக்களுக்கு மாற்று அரிசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், அரிசி இது போன்று இருந்தால் பொதுமக்களுக்கு வழங்கக் கூடாது என ரேஷன் கடை விற்பனையாளரிடம் வட்டாட்சியர் தெரிவித்தார்.
இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், "இந்த ரேசன் கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு சமையலுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஆனால், நாங்கள் இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டு வருகிறோம். சில நாட்களாக எங்களுக்கு செரிமானப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு முடிவு ஏற்பட வேண்டும் என்பதால் அனைவரும் ஒன்று சேர்ந்து ரேஷன் கடை முற்றுகையில் ஈடுபட்டோம்" என்கின்றனர்.