கடந்த நில நாட்களுக்கு முன்பு ஆலங்குடியில் கொல்லப்பட்ட மருந்துக்கடை ஊழியர் கஸ்தூரி கொலை வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றக்கோரியும், கொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்தவுடன் கஸ்தூரி குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க கோரியும் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் கீரமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்திரவேல் மகள் கஸ்தூரி (வயது 19). ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் மருந்துக் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 28 ந் தேதி வேலைக்கு சென்ற கஸ்தூரி வீடு திரும்பவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த நிலையில் 31 ந் தஞ்சாவூர் மாவட்டம் மல்லிபட்டினம் கடலுக்கு செல்லும் ஆற்றுவாய்க்காலில் சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அதிரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் நாகராஜன் மற்றும் அவரது சித்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கஸ்தூரியை நாகராஜன் கடத்திச் சென்று அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டு பாலியலில் ஈடுபடுத்தி கொலை செய்துள்ளதாக கஸ்தூரியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தினார்கள். இந்த நிலையில் மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கீரமங்கலத்தில் இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் கஸ்தூரி கொலையில் சம்மந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும், வழக்கு விசாரனையை சி.பி.ஐ. க்கு மாற்ற வேண்டும், கஸ்தூரி குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் கீரமங்கலம் போலிசார் அனுமதி வழங்காததால் ஆர்ப்பாட்டம் நடத்த பெண்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களும் திரண்டதால் பரபரப்பு எற்பட்டது. அனுமதி கொடுக்கவில்லை என்றாலும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். அதன் பிறகு நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டது.
இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் இந்திராணி தலைமையில் முத்தமிழ்செல்வி, மாவட்ட நிர்வாகிகள் பூமதி, தனலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் கண்ணகி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில துணைச் செயலாளர் கண்ணகி செய்தியாளர்களிடம் கூறும் போது.. கஸ்தூரி போலவே 7 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டிற்குள் இருந்த சிறுமி அபர்னா இதே போல கொல்லப்பட்டிருக்கிறார். அந்த வழக்கும் இன்னும் முறையான விசாரனை இல்லாமல் உள்ளது. அதே போல தர்மபுரி மாவட்டத்தில் சௌமியா என்ற பள்ளி மாணவி கூட்டு பாலியல் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவங்களில் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் அடுத்தடுத்த சம்பவங்கள் நடக்கவிடாமல் தடுக்க முடியும். கஸ்தூரிக்கு நீதி கேட்கும் இந்த போராட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.