கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் பகுதியில் வாகனத்தில் செல்லும்போது வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள நிழல் குடை உடன் குருக்கள் ஒருவர் சுற்றி வருவது பொது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பொதுவாக ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் கோடைக்காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதமே கோடை வெயில் கடுமையாக இருந்தது. கோடை வெயிலின் உச்சம் கடந்த நான்காம் தேதி துவங்கி 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திலேயே அதிகபட்சமாக 100 டிகிரி முதல் 108 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் கோடை மற்றும் அக்கினி வெயில் கொடுமை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மதிய வேளைகளில் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது.
இதனால் பேருந்து மற்றும் வாகனங்களில் செல்லும்போது அனல் காற்று போல் அடித்தது. அந்த வகையில் அரவக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மதிய வேளைகளில் ரோட்டில் ஆள் நடமாட்டம் சற்று குறைந்தே காணப்பட்டு வந்த நிலையில் சின்னதாராபுரம் பகுதியில் விநாயகர் கோவில் அர்ச்சகராக உள்ள பாபு குருக்கள் புதுமையான வழியில் தனது இரு சக்கர வாகனத்தில் நிழலுக்கு குடை அமைத்து, செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று திரும்புவது அப்பகுதி வழியாக வலம் வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.