கரூரில், கல்லூரி மாணவிகளிடம் ராட்சஷன் பட பாணியில் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக அரசு கலைக்கல்லூரி பொருளியல் துறைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களின் தொடர் பேராட்டத்திற்கு பிறகே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளது.
கரூர் தான்தோன்றிமலை பகுதியில் இயங்கி வரும் அரசு கலைக்கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இங்கு பொருளாதாரத்துறை தலைவராக பணிபுரியும் இளங்கோவன், பாலியல் சில்மிஷங்களில் ஈடுபடுவதாக சில தினங்களுக்கு முன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார்.
உடனடியாக புகாரை காவல் ஆய்வாளருக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடாத மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாணவியின் புகாரை கல்லூரி முதல்வருக்கு அனுப்பி அது குறித்து விசாரிக்க கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.
கடந்த ஒருவாரமாக விசாரிப்பதாக கூறி மாணவர்களை அலைக்கழித்த கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட மாணவர்களின் வகுப்புக்கு மட்டும் 4 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.
பாலியல் அத்துமீறல் தொடர்பான புகாரில் காவல் கண்காணிப்பாளர் அலட்சியம் காட்ட, கல்லூரி முதல்வரோ மெத்தனமாக இருந்துள்ளார். பாலியல் புகாருக்குள்ளான இளங்கோவன் மீது ஒரு வாரமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை..!
கல்லூரியின் பொறுப்பு முதல்வரான ரவிச்சந்திரனோ, விசாரணை அறிக்கை மாநில கல்லூரி கல்வித்துறை இயக்குனரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி நலுவ முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவ, மாணவிகள், தாங்கள் அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்து அறிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு பேரணியாக சென்றனர்.
பாதியிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர், இது தேர்தல் காலம் என்றும் ஊர்வலம் நடத்த அனுமதி கிடையாது என்று மாணவர்களை மிரட்டினர்.
மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்ததாலும், நடப்பவைகளை செய்தியாளர்கள் படம் பிடிப்பதாலும் உஷாரான காவல்துறையினர் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகளை மட்டும் தனது வாகனத்தில் அழைத்து வந்த உதவி காவல் ஆய்வாளர் நாகவள்ளி , மாணவிகளிடம் மீண்டும் புகாரை முறைப்படி எழுதி வாங்கிக் கொண்டு கல்லூரிக்கு சென்று பொருளியல் துறைதலைவரான இளங்கோவனை காவல் நிலையம் அழைத்து வந்தார்.
ராட்ஷசன் படத்தில் வரும் கணக்கு வாத்தியார் போல மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து தனியாக அடைத்து வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதை வாடிக்கையாக செய்துவந்துள்ளார் இளங்கோவன்.
கடந்த 7 வருடங்களாக அவரது பயங்கர செயலால் ஏராளமான மாணவிகள் பாதிக்கப்பட்டாலும் இளங்கோவனை கண்டால் ஏற்படும் பயம் மற்றும் பீதியில் ஒருவர் கூட புகார் அளிக்கவில்லை என்று சக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
துணிச்சலுடன் மாணவி அளித்த புகாரை விசாரிக்காமல் கல்லூரிக்கே திருப்பி அனுப்பியதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் விவரத்தை கசியவிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் போலிசின் தொடர் விசாரணைக்கு பிறகு பேராசிரியர் இளங்கோவன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதாக தெரிகிறது. இதையடுத்து இளங்கோவனை கைது செய்த காவல்துறையினர், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்களிடம் கரூர் தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் பார்த்தசாரதி நேரில் விசாரணை நடத்தினார்.