பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள நல்லாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த 6 முதல் 20 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் என 15 பேர் ஒன்று சேர்ந்து நேற்று மதியம் கூட்டாஞ்சோறு சமைத்து விளையாடியுள்ளனர். அப்போது நூடுல்ஸ் சாப்பிட ஆசைப்பட்டு கடையில் 15 பாக்கெட் நூடுல்ஸ் வாங்கி வந்துள்ளனர். அதனை சமைக்க எண்ணெய் தேவைப்பட்டுள்ளது.
அப்போது நண்பர்கள் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுமியின் தந்தையான கனகராஜ் என்ற கதிர்வேல் என்பவர் தனது வீட்டில் வயலுக்கு களைக்கொல்லியாக தெளிக்கப்படும் மருந்தை ஒரு தண்ணீர் கேனில் அடைத்து வைத்திருந்துள்ளார். அதனை குழந்தைகள் பார்த்தபோது எண்ணெய் போல் இருந்ததால் அதனை எடுத்து வந்து நூடுல்ஸ் தயாரிக்க பயன்படுத்தியுள்ளனர். நூடுல்ஸ் ரெடியானவுடன் அனைவரும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர். பின்னர் மாலையில் நூடுல்ஸ் சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து தங்களது பெற்றோரிடம் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டது குறித்து கூறியுள்ளனர். பின்னர் தான் எண்ணெய் என நினைத்து சிறுவர்கள் பயன்படுத்தியது களைக்கொல்லி மருந்து என தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட 15 பேரும் நூடுல்ஸ் தயாரிக்க பயன்படுத்திய களைக்கொல்லி மருந்து பாட்டிலை எடுத்துக்கொண்டு தோகைமலை அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அனைவரும் திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை மணப்பாறை நகர திமுக செயலாளர் மு.ம.செல்வம் நேரில் சந்தித்து நலம் விசாரித்து மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தி நூடுல்ஸ் செய்து சாப்பிட்ட சிறுவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.