ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலைமலை உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் நுழைவதும், பயிர்களை சேதம் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, கரளவாடி, அக்கூர் ஜோரை, ஜோரா ஓசூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்குள் வனப்பகுதியில் சுற்றித் திரியும் கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. மேலும் வனத்துறையினரையும், விவசாயிகளையும் துரத்தி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி ஆனைமலையிலிருந்து முத்து, கபில்தேவ் என இரண்டு கும்கி யானைகள் கருப்பனை பிடிக்க அழைத்து வரப்பட்டன. ஆனால் கருப்பன் யானையைப் பிடிக்க முடியாததால் மீண்டும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சலீம் என்ற கும்கி யானை வந்தது.
இவ்வளவு முயற்சி செய்தும் கருப்பன் யானையைப் பிடிக்க முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் கருப்பன் யானை சென்று மறைந்து விட்டது. இதனையடுத்து வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் வனத்துறையினர் கருப்பன் யானையைப் பிடிக்கும் வகையில் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். இருந்தும் கருப்பன் யானை அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று மீண்டும் மறைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து கருப்பன் யானையைப் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. சில நாட்களாக கருப்பன் யானை தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தாளவாடி வனப் பகுதியில் உள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பனை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து கருப்பன் யானையைப் பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பொம்மன், சுஜய் ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைக்க தாளவாடி வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று பொம்மன், சுஜய் இரண்டு கும்கி யானைகளும் தாளவாடி மலைப் பகுதிக்கு வந்தன.