சிவகங்கை தொகுதியின் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், இன்று (13/02/2021) தன்னுடைய சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பெங்களூருக்கு புறப்படும் முன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்
அப்போது அவர் கூறியதாவது; "தேர்தலைப் பொறுத்தவரை நாங்கள் தொகுதிப் பங்கீடு என்பதைக் கருத்தில் கொள்ளாமல், 234 தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களோடு நின்று வெற்றிபெற வைப்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். குற்றப் பரம்பரை என்பது சசிகலாவின் ரத்தத்தில் ஊறியது என்ற விமர்சனம் சரியானதல்ல, ஜாதியை முன்வைத்து எந்த ஒரு அரசியல் நிகழ்வும் தமிழகத்தில் நடக்கக் கூடாது. அ.தி.மு.க.விற்கு எத்தனை உறவுகள், எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும், இறுதியாக சசிகலாவிடம் தான் அ.தி.மு.க. செல்லும்; சசிகலாதான் அ.தி.மு.க.வை வழி நடத்துவார்" என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம், 'வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் முறையில், தற்போது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட வாய்ப்புள்ளது என்பதால், அதனை முழுமையாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியிருக்கும் நிலையில், இது குறித்து தங்களுடைய கருத்தைக் கூறுங்கள் என்று கேள்வி எழுப்பிய போது, "இந்த வாக்காளர்களுக்கான பணம் என்பதை வாக்காளர்கள் வாங்காமல் இருந்தால், இது முடிவுக்கு வந்துவிடும். இருந்தாலும் ராமானுஜத்தின் கணித ஃபார்முலா மறந்துபோனாலும், ஆர்.கே.நகர் ஃபார்முலாவும், திருமங்கலம் ஃபார்முலாவும் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது" எனக் கூறினார்.