ரஜினி எனும் பொம்மையை, தன்னுடைய இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் வித்தைக்காரனாக பாஜக செயல்படுகின்றது என கார்த்திக் சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தனியார் நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, "பொம்மலாட்டக்கார் ஆட்டுவிக்கும் பொம்மை போல் ரஜினி பேசியுள்ளார். அவருடைய பேச்சின் மூலம் அவருக்கு பின்னணியில் இருப்பவர்கள் அறியப்பட்டார்கள். வெளியில் இருந்து கருத்தை தெரிவிப்பதைக் காட்டிலும் நேரிடையாகவே அவர் பாஜகவில் இணைந்து கருத்தைத் தெரிவிக்கலாமே..?. திருத்தம் செய்யப்பட்ட இந்திய குடியுரிமை சட்டம் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததைப் போல் இருக்கின்றது. அங்கே ஹிட்லர் யூதர்களை தேடி தேடி வேட்டையாடியது போல், இங்குள்ள மோடி ஹிட்லர் அவ்வாறு செய்கின்றார்." என்றார்.
இதன் முன்னதாக காரைக்குடியில் பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்தி சிதம்பரம், " கீழடி அகழாய்வில் இந்துத்வா -சமஸ்கிருத கொள்கைகளுக்கு எதிராக தரவுகள் கிடைத்திருப்பதால் அதனை கிடப்பில் போடும் வேலையை மத்திய அரசு செய்து வருவதாகவும்" பேசியது குறிப்பிடத்தக்கது. இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, " குடியுரிமை சட்டத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு இல்லை. சில அரசியல்வாதிகளும், மதகுருக்களும் தங்களுடைய சுய லாபத்துக்காக சட்டத்தினை எதிர்த்து அப்பாவிகளை தூண்டி விடுகின்றனர்." என்றதின் எதிர்வினையே கார்த்திக் சிதம்பரத்தின் சாடல் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.