சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கான சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை செய்ததாகக் கூறி அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில், கார்த்தி சிதம்பரத்தின் மீது கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்குச் சொந்தமான இடங்களில் பலமுறை அமலாக்கத்துறையினர் சோதனையும் நடத்தியிருக்கின்றனர்.
இந்த நிலையில் சட்ட விரோதப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 3 அசையும் சொத்துகளும், 1 அசையா சொத்தும் முடக்கப்பட்டுள்ளன.