கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் கருவாட்டுச் சந்தை என்பது அந்த வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒன்று. இங்கு பல தலைமுறைகளாக கருவாடுகள் விற்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இதனை வாங்கிச் செல்வது வழக்கம். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் இருக்கும் மீனவர்கள் தங்களது கருவாடுகளை இங்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலிருந்தே இந்த கருவாட்டுச் சந்தையானது செயல்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு மிகவும் பழமை வாய்ந்த ஒரு கருவாட்டுச் சந்தையாகும்.
கார்த்திகை மாதத்தில் கருவாடுகள் அதிகமாக விற்பனையாகும் நிலையில், இந்த முறை கூட்டம் குறைவாக உள்ளதாகவே வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எப்பொழுதுமே தீபத்திருவிழாவிற்கு மறுநாள் கடலூர் சுற்றுவட்டாரத்தில் கருவாடு சமைப்பது வழக்கம். அதன் காரணமாக தீபத்திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் இந்தக் கருவாட்டுச் சந்தைக்கு ஏற்பாடு செய்யப்படும். தற்பொழுது சந்தை நடந்து வரும் பகுதி சரியான பராமரிப்பு இன்றி, தூய்மையற்று கிடப்பதால் இதனை அரசு நிர்வாகம் மேம்படுத்தித் தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.