தமிழக வனத்துறையினரால் கோவையில் பிடிபட்ட மக்னா யானை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுவதற்கு காரமடை பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவையில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடிக்கப்பட்ட மக்னா யானையை காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக பிடிபட்ட மக்னா யானையை லாரி மூலம் காரமடை வெள்ளியங்காடு சாலைக்கு கொண்டு வந்தனர். இதனையறிந்த வெள்ளியங்காடு ஊர் மக்கள் மற்றும் அந்த பகுதி விவசாயிகள் யானையை கொண்டு வந்த தமிழ்நாடு வனத்துறை லாரியை முற்றுகையிட்டு நிறுத்தி யானையை திரும்பிக் கொண்டு செல்லுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இங்கே மக்னாவை விட்டால் மீண்டும் ஊருக்குள் வந்து மக்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும். விளைநிலங்களை வீணடிக்கும் என விடிய விடிய போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்திய மக்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் யானை மேட்டுப்பாளையம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் உள்ள வனத்துறை மரக்கிடங்கில் லாரியுடன் மக்னா யானை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை உயர் அதிகாரிகள் எந்த வனப்பகுதியில் விடுவது என முடிவெடுக்காததால் கால் கடுக்க லாரியில் நிற்கிறது மக்னா.