Skip to main content

கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் பேட்டி!

Published on 05/12/2017 | Edited on 05/12/2017
கன்னியாகுமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் பேட்டி!

கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, அதன் மூலம் மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டிருக்கின்ற பொதுமக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஓகி புயலால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களுடன் நான் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். அந்த ஆய்விலிருந்து, ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி மத்திய – மாநில அரசுகள் எந்தவித கவலையும் படவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நேற்றைய தினம் மேற்கொண்ட ஆய்வு குறித்து, இன்று காலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்றமுறையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், காணாமல் போனவர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கும் பணியில் கூட இந்த அரசு ஈடுபடவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. எப்படியென்றால், காணாமல் போனவர்கள் 97 பேர் என்று தலைமைச் செயலாளர் அறிவித்திருந்தார். அதன் பிறகு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் காணாமல் போனவர்கள் 97 பேர் என்று அறிவித்தார்.

ஆனால், ‘குதிரை பேர’ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 294 பேரை மீட்டு விட்டோம், மீதமுள்ள 260 பேரை மீட்பதற்கான பணியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று அறிவித்தார். அதாவது, இரண்டையும் கூட்டினால் மொத்தம் வரக்கூடிய 554 பேர் என்பது அவருடைய கணக்கு. அதன் பிறகு, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் காணாமல் போய், கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்களின் கணக்கினை வெளியிட்டபோது, 2,124 பேர் என்று ஒரு கணக்கினை சொன்னார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் புயல் நிவாரணப் பணிகளை ஆய்வு நடத்துவதாக அங்கு ஒரு நாடகத்தை நடத்துவதற்காக சென்று இரு நாட்கள் முகாமிட்டபோது, அவர் தந்துள்ள கணக்கு 2,384 பேர் காணவில்லை என்று தெரிவித்தார். ஆனால், இன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தந்திருக்கின்ற கணக்கில் 2,570 மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இப்படி பல குழுப்பமான கணக்குகள் தான் தரப்படுகின்றன.

அங்கே தத்தளித்துக் கொண்டிருக்கின்ற மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் பெருமளவில் இன்றைக்கு பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். எனவே, கேரள மாநில முதலமைச்சர் அந்த மாநிலத்தை பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது போல, கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவித்து, அதன் மூலம் மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை பயன்படுத்தி, பாதிக்கப்பட்டிருக்கின்ற பொதுமக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, கன்னியாகுமரியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், பொதுமக்களையும் நான் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்குவதற்காக நேற்றைய தினம் அங்கு சென்றபோது, சில இடங்களில் இருந்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றி இருக்கிறார்கள். அப்படி வெளியேற்றியபோது, அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்திருந்தால் முறையாக இருந்திருக்கும். ஆனால், அதையும் செய்யவில்லை. இந்த நிலைதான் அங்கு இருக்கிறது. எனவே, மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்: ஏற்கனவே வர்தா புயல் பாதிப்பிற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லையே?

ஸ்டாலின்: கிட்டதட்ட 88,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்த ஆட்சி மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறது. ஆனால், அந்த நிதி இதுவரை வந்து சேரவில்லை. அதுபோன்ற நிலைதான் இப்போதும் உருவாகுமோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்