
மும்மொழி கொள்கையை ஆதரித்து பாஜக சார்பில் சென்னையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் மும்மொழி கொள்கையை ஆதரித்து கையெழுத்து வாங்க பாஜக திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் கையெழுத்து பெறவும் பாஜக ஏற்பாடு செய்துள்ளது. நேற்று கோயம்பேட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்கு வந்த போலீசார் அனுமதி வாங்காமல் கையெழுத்து போராட்டம் நடத்தக்கூடாது என தெரிவித்தனர். போலீசார் தமிழிசை சவுந்தரராஜனிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 'மக்களிடம் தங்களுடைய கோரிக்கையை எடுத்து வைத்து மும்மொழிக் கொள்கை தேவை என்பதை குறித்து கையெழுத்து வாங்க இருக்கிறோம். பொதுமக்கள் பார்வையில் நாங்கள் செய்வது கரெக்ட் சார். பாமர மக்களுக்கு மூன்று மொழி சொல்லிக் கொடுங்கள் என மிகவும் பொறுமையாக ரொம்ப அமைதியா கேட்க வந்திருக்கிறோம். நீங்கள் செய்வதை செய்து கொள்ளுங்கள். பொது மக்களை பார்ப்பது தவறா?'' என தமிழிசை கேள்வி எழுப்பினார். போலீசார் தொடர்ந்து தடுத்ததால் பாஜகவினர், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த திமுகவினர் 'பிஜேபி கெட் அவுட்' என முழக்கமிட்டதால் பரபரப்பானது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தூத்துக்குடி எம்பி கனிமொழி பேசுகையில், ''தமிழ்நாட்டில் இருந்து வரக்கூடிய வரியை வாங்கிக் கொள்கிறீர்கள். ஜிஎஸ்டி என சொல்லி தமிழ்நாட்டின் வரி மொத்தத்தையும் வாங்கி வைத்துக் கொண்டு நமக்கு தர வேண்டிய நிதியை தருவதில்லை. இதில் நீ மூன்று மொழியை படித்தால் தான் உங்கள் பிள்ளைகளுக்கு கல்விக்காக 2000 கோடி ரூபாய்க்கு மேல் தர வேண்டிய பணத்தை நான் கொடுப்பேன் என மத்திய ஒன்றிய அரசாங்கம் பிடித்து வைத்துக் கொண்டு, மூன்று மொழிகளை படியுங்கள்... படியுங்கள்... என்று இந்தியை திணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது திடீரென ஒரு புது கதையை சொல்கிறார்கள். மூன்று மொழியை நாங்கள் படிக்க சொன்னோம்.ஆனால் இந்தி மொழியை படிக்க சொல்லவே இல்லையே. மூன்று மொழி என்றால் மூன்றாவது மொழி என்ன என்பதை நீங்களே முடிவு செய்து படியுங்கள் என்று தானே சொல்கிறோம் என்கிறார்கள். நான் கேட்கிறேன் தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இருக்கிறது அல்லவா, தமிழ்நாட்டில் நடக்கின்ற கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எங்கேயாவது தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்களா? என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் இந்தி, இங்கிலீஷ், மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் சொல்லித் தருகிறார்கள். மொழி திணிப்பு வழியாக தமிழக மண்ணில் காலூன்றி விடலாம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது. யாரோ ஒரு அம்மையார் வந்து கையெழுத்து இயக்கம் நடத்துறேன், கையெழுத்து வாங்குகிறேன் என சொல்லி வாங்கி கட்டிக் கொண்டு போய் இருக்கிறார்கள்'' என்றார்.