படித்த படிப்புக்கு இங்க எங்கும் நல்ல வேலையில்லை என புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள திட்டக்குடியைச் சேர்ந்த சுரேந்தர் (32), அவரது சொந்தக்காரர்கள் கூறியதற்கேற்ப, கடன் வாங்கி வேலைக்காக சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார்.
இவர், தனது மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் ஏஜென்டு மூலம் பணம் கட்டி அந்த வேலைக்கு சென்றுள்ளார். முன்னதாக விசாவந்ததை அவர் ஊர்காரர்களிடமும் உறவினர்களிடமும் காண்பித்து, ‘என் மனைவியை நல்லா பார்த்துகோங்க’ என்று கூறி வெளிநாட்டிற்குச் சென்றுள்ளார். விமானம் ஏறப் போகும்போது, தன் 2 1/2 வயது மகனிடம், “அம்மா சொல்றதைக் கேட்டு சேட்டை செய்யாம இருந்துக்கப்பா.. ஊர்ல இருந்து வரும்போது அப்பா உனக்கு ரிமோட் கார் வாங்கிட்டு வருவேன்” என்று சொல்லியுள்ளார்.
அதேபோல் தனது ஒரு மாத மகளைக் கொஞ்சிவிட்டு, “உன் பிறந்த நாளைக்கு அப்பா வருவேன்மா.. வரும்போது பொம்மையும் புது சட்டையும் வாங்கிட்டு வறேன்”னு சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார். மேலும் தன் 23 வயது நிறைந்த மனைவியிடம் “குழந்தைகளைப் பத்திரமா பார்த்துக்க, உன் உடம்பையும் பார்த்துக்க. கவலைப்படாம நேரத்துக்குச் சாப்பிட்டனும். நம்ம குழந்தை முதல் பிறந்தநாளுக்கு லீவு கிடைச்சா ஊருக்கு வந்துட்டுப் போறேன்” என்று சொல்லி கண்கலங்கிவிட்டு சென்றுள்ளார் சுரேந்தர்.
சிங்கப்பூர் சென்று இறங்கியதும் கரோனா தடுப்பு விதிமுறை காரணமாக சுரேந்தரை தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சில நாட்கள் காய்ச்சல் இருந்ததால் வேலைக்கு அனுப்பவில்லை. நண்பர்கள் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். 2 மாதமாக வேலைக்குச் செல்லாமல் அறையில் இருந்தார். இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு சுரேந்தர் தற்கொலை செய்துகொண்டதாக ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. இதைக் கேட்டதில் இருந்து பச்சைக்குழந்தையைக் கையில் வைத்திருக்கும் அவரது மனைவி கதறி அழுதே மயங்கி விழுந்தார்.
ஆறுதல் சொல்ல முடியாமல் உறவுகளும் சில நாட்களாக வருத்தத்திலேயே இருந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் உள்ள சிலர் உதவியுடன் சுரேந்தர் உடலை ஊருக்குக் கொண்டு வரும் முயற்சிகள் நடந்துவருவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர். ‘வாங்கிய கடனை இனி யார் கட்டுவார்? போன இடத்திலிருந்து ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லையே’ என்று சொல்லும் உறவினர்கள், ‘சின்ன வயசுலயே இப்படி நடந்துவிட்டதே, குழந்தைகளை வளர்க்கவும், வாங்கி கடனைக் கட்டவும் ஒரு வேலை கொடுத்தாங்கன்னா நல்லா இருக்கும். யாரு ஜெயிச்சு ஆட்சிக்கு வந்தாலும் இந்தப் பொண்ணுக்கு ஒரு வேலை கொடுக்கணும்’ என்கிறார்கள்.
“மகளோட முதல் பிறந்தநாளுக்கு வருவேன்னு சொன்னீங்களே.. இப்ப பிணமா வரீங்களே” என்று கதறுகிறார் சுரேந்தர் மனைவி. இந்த அழுகுரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.