தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், கடந்த வாரம் பஞ்சாப் ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நேற்று 18.09.2021 காலை அவர் தலைமை நீதிபதி முன்பு தமிழ்நாடு ஆளுநராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, பொன்முடி, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் முதல் ஏழு வரிசைகளில் விழாவிற்கு வந்திருந்த அமைச்சர்கள் அமர்ந்திருந்தனர். அதனையடுத்து அதற்கடுத்த ஒன்பதாவது வரிசையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரும் விழாவிற்கு வருகை புரிந்திருந்தார். எல்.முருகனுக்கு எட்டாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் எல்.முருகன் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமராமல் எடப்பாடி பழனிசாமி அருகில் அமர்ந்தார். இதனைக் கவனித்த அதிகாரிகள் அவருக்கான இருக்கை எட்டாவது வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது என அவரிடம் தெரிவித்தனர். ஆனால் எனக்கு இந்த இடமே போதும் என எல்.முருகன் கூறியுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி, எழுந்து வந்து எல்.முருகனிடம், முன் வரிசையில் அமர்ந்து கொள்ளுமாறும், தங்களுக்கு இடம் அங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். ஆனால் தனக்கு இந்த இடமே வசதியாக உள்ளது இங்கேயே அமர்ந்து கொள்வதாக அவர் கூறிவிட்டார். அதேபோல் அருகில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி வணக்கம் தெரிவித்தார் அவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார்.