காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், அந்த ஆலையின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை 11:30 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் முதல்கட்டமாக 8 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். அதேபோல் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு சிறப்பான சிகிச்சை தரவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.