Skip to main content

தாயைப் பராமரிக்கத் தவறிய மகனுக்கு எதிரான புகார்!- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/09/2020 | Edited on 27/09/2020

 

KANCHIPURAM DISTRICT COLLECTOR CHENNAI HIGH COURT ORDER

போலி பாசம் மூலம் வீட்டுமனையை எழுதிவாங்கிவிட்டு, தாயை பராமரிக்கத் தவறிய மகனுக்கு எதிரான புகாரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும், அதன்மீது ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காஞ்சிபுரம் ஒரிக்கையை சேர்ந்த நடராஜன்- ராஜலட்சுமி தம்பதியருக்கு மூன்று மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். மகள்கள் மூவரும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முதல் இரு மகன்கள் திருமணமாகி தனிக்குடித்தனம் நடத்தி வருகின்றனர். தந்தை இறந்துவிட்ட நிலையில், 40 வயதை கடந்த மூன்றாம் மகனுக்கு திருமணமாகாத நிலையில், சிறுவியாபாரம் மூலம் சொற்ப வருமான ஈட்டி வருவதுடன், தாய் ராஜலட்சுமியுடன் வசித்து வருகின்றார்.

 

இரண்டாம் மகன் ஏழ்மையில் இருக்கும் நிலையில், முதல் மகன் கிருபாசேகரன் திருமணமானது முதல் வசதியுடன் வாழ்வதாக கூறப்படுகிறது. ஆனாலும் தாய் ராஜலட்சுமியையோ, சகோதர, சகோதரிகளின் நிலை குறித்தோ அவர் கவலைப்படுவதில்லை என்றும், 20 வருடமாக எந்த நிதி உதவியோ செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

 

ஆனால், கடந்த 2016- ஆம் ஆண்டு திடீர் பாசம் காட்டிய கிருபாசேகரனும் அவரது மனைவியும், அங்கம்பாக்கத்தில் உள்ள 4 ஆயிரத்து 304 சதுரஅடி பரப்பளவுள்ள வீட்டுமனையை மோசடியாக தங்கள் பெயருக்கு செட்டிமெண்ட் எழுதி வாங்கியுள்ளனர்.

 

கடன்காரர்களின் தொல்லை என கூறியதால் இடத்தை அடமானம் வைப்பதற்காக என கூறி வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலகத்தில் கையெழுத்து வாங்கியது மோசடி என பின்னர்தான் ராஜலட்சுமிக்கு தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து, கடந்த ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியர், டி.எஸ்.பி, சார் பதிவாளரிடம் அளித்த புகாரில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டத்தின் கீழ் தன்னை முறையாக பராமரிக்க மகன் கிருபாசேகரனுக்கு உத்தரவிடக் கோரியும், மோசடியாக செய்த செட்டில்மெண்ட் பதிவை ரத்து செய்ய கோரியும் கோரிக்கை வைத்துள்ளார்.

 

அந்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரை எதிர்மனுதாரராக சேர்த்ததுடன், ராஜலட்சுமியின் புகார் குறித்து இரு தரப்பிலும் விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

 

அந்த அறிக்கையை பெற்று பெற்றோர் பராமரிப்பு சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் உடனடியாக எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

 

 

சார்ந்த செய்திகள்