திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 55 வயது நபர் தனது மனைவி மற்றும் மகனுடன் கொடைக்கானலுக்கு வந்துள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் 3 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே அந்த நபர் கொடைக்கானலில் நான்கு நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த நபர்களையும் தனிமைப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் அண்ணா நகர் பகுதி சீல் வைக்கப்பட்டு மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அருணகிரி 5- வது தெருவில் உறுதிச் செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மாணவி மற்றும் அவரது தாய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், அந்தப் பகுதியில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கொடைக்கானல் ஆனந்த கிரியைச் சேர்ந்த 65 முதியவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் கொடைக்கானலில் கரோனாவுக்கு முதல் உயிர் பலி ஏற்பட்டது. மாவட்டத்தில் ஏற்பட்ட மூன்றாவது உயிர் பலி இதுவாகும்.
கொடைக்கானல் பகுதியில் கரோனா தொற்று இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் வீட்டைவிட்டு வெளியே வரவும் தயக்கம் காட்டி வருகின்றனர் சீல் வைக்கப்பட்ட பகுதி மக்கள்.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொடைக்கானலுக்கு வருபவர்களால் தான் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று கூறுகின்றன கொடைக்கானல் நகர பொதுமக்கள். அவர்களை நகர எல்லையில் வைத்து மருத்துவப் பரிசோதனை செய்து முகாம்களில் தங்க வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.