"கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிப்பாடும்" என்பார்கள் ஆம் கம்பராமாயணத்தை வடித்துக்கொடுத்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்து வாழ்ந்த இடம் தற்பொழுது பொலிவிழந்து புதராக மாறிக் கொண்டிருப்பதை கண்டு தமிழ் ஆர்வலர்கள் கவலை கொள்கின்றனர்.
நாகை மாவட்டம் குத்தாலத்தில் இருந்து கோமல் செல்லும் வழியில் ஆறாவது கிலோ மீட்டரில் உள்ளது தேரழுந்தூர். அந்த கிராமமே கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த ஊர். அவர் வாழ்ந்த இடமே கம்பர் மேடு என்று அழைக்கப்படுகிறது. கம்பரும் அவரது குடும்பத்தினரும் ஒரு முறை உணவு சமைக்க பயன்படுத்தும் மண்பாண்டங்களை மறுமுறை பயன்படுத்தாமல் அன்றே உடைத்து வந்துள்ளனர். அந்த மண்பாண்ட ஓடுகள் குவிந்து ஒரு பெரிய மேடாக மாறியதே தற்போது கம்பர் மேடு என்று அப்பகுதி மக்கள் அழைக்கின்றனர்.
"கம்பர் மேட்டுப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக இந்திய தொல்லியல் துறை அறிவித்து தம்வசம் வைத்துக்கொண்டது. ஆனால் இந்தப்பகுதியை பாதுகாத்து சுற்றுலா பயணிகளை கவரந்திழுக்கும் எந்த பணிகளையும் தொல்லியல்துறை செய்திடவில்லை" என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள். கம்பர் மேட்டுப்பகுதியில் இது தொல்லியல்துறைக்கு சொந்தம் என அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டதோடு சரி, அதற்கு பிறகு யாரும் கண்டுகொள்ளாமல் விட்டதன் நிலமை, இன்று அந்த இடம் கருவேலம் முள்செடிகள், கொடிகளால் புதர்மண்டி கிடக்கிறது.
தமிழ் மொழியின் சிறப்பை தன் காவியங்களின் மூலமாக அறியச் செய்த கம்பர், பல வகைகளில் ராமாயணம் உள்ளன. அதில் ஒன்று தான் தமிழ் கவிஞர் கம்பர் இயற்றிய கம்பராமாயணம் 10,000 பாடல்கள், நூல்கள், வைணவ பக்தி இலக்கியத்தில் முதன்மையாகத் திகழும் கம்பராமயணம், தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை 1000 பாடல்களுக்கு ஒரு முறை போற்றிய எழுதியவர் கம்பர். ஒரே மகனான அம்பிகாபதி சோழ இளவரசியான அமராவதியுடன் ஏற்பட்ட காதலால் உயிரிழந்தார். வால்மீகி எழுதிய ராமாயணத்தை உள்வாங்கி எழுதி அதை பன்மடங்கு இலக்கணமும் இலக்கியமும் கொண்ட காவியமாக மாற்றிய பெருமை கம்பரையே சாரும். இன்று வரை தமிழ் மொழி வரலாற்றில் நீங்கா இடம் பெற்றவர் சக்கரவர்த்தி கம்பர் ஆவார்.
அவர் வாழ்ந்த இடம் இன்று கேட்பாரற்றும், குற்றங்களின் புகலிடமாகவும் மாறி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்களும், தமிழ் ஆர்வலர்களும், சுற்றுலா பயணிகளும் கம்பர் பிறந்த இடத்தை காண வந்து செல்கின்றனர். அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கருவேலம் காட்டுக்குள் இருக்கும் கம்பர் மேட்டை காண முடியாமல் கருவேல மரங்களை மட்டுமே பார்த்து விட்டு வேதனையோடு செல்கின்றனர்.
கம்பர் மேடு அப்பகுதி மக்களின் அறிவிக்கப்படாத கழிப்பிடமாகவும், கம்பர் மேட்டின் சுற்றுச்சுவர்வேலிகள் பைது மக்களின் துணிகள் காய வைக்கும் இடமாக மாறிவிட்டது. தொல்லியல் துறை கையகப்படுத்தப்பட்ட இடத்தை சுற்றி 100 மீட்டரில் இருந்து 200 மீட்டர் பகுதிக்குள் எந்தவித கட்டுமான பணிகளும் செய்யக்கூடாது என்று அறிவிப்பும் தற்பொது காற்றில் பறக்கவிடப்பட்டுவிட்டது.
இன்றைக்கும் கம்பர் மேடு கேட்பாரற்றுக் கிடக்கும் சூழலே ஏற்பட்டுள்ளது. கம்பன் வாழ்ந்த இடம் தமிழ் பரப்பும் இடமாக மாற வேண்டும் ஆகவே தொல்லியல் துறையினர் அலட்சியம் காட்டாமல் பாரம்பரியத்தை பராமரிக்க வேண்டும்," என்பதே தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.