அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசியபோது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று கூறினார். கமல்ஹாசனின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை கிளிப்பியுள்ள நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று சொல்லியதற்காக கமலின் நாக்கை வெட்ட வேண்டும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறினார்.
ராஜேந்திர பாலாஜியின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்தது. பதவிப்பிரமாணத்தின் போது எடுத்த உறுதிமொழியை ராஜேந்திர பாலாஜி மீறியுள்ளார். ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’நாக்கை அறுப்பேன் என்றால் உடனே அறுத்துவிடுவோமா? ஜெயலலிதா இருந்த போது நாட்டை விட்டு ஒடுவேன் என்றவர் கமல். மக்கள் சகோதர மனப்பான்மையுடன் பழகிவரும் வேளையில் பயங்கர வாதத்தைத் தூண்டும் இந்தப்பேச்சு அவர் ஐ.எஸ். தீவிரவாதைகளிடம் காசு வாங்கிக்கொண்டு கைக்கூலியாக மாறிவிட்டாரோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த செயலுக்குப் பின்னால் இருக்கும் ரகசியத்தை மத்திய உளவுத்துறையினர் கண்டுபிடிக்கவேண்டும்.
மக்களின் எண்ணத்தை பிரதிபலித்துதான் நான் கமல் நாக்கை அறுப்பதாகப் பேசினேன். தன் செயலுக்கு வருந்தி கமல் மன்னிப்புக் கேட்டால்தான் என் வார்த்தைகளைத் திரும்பப்பெறுவது குறித்தே யோசிப்பேன். மற்றபடி, என்னை பதவி நீக்கம் செய்ய கூறுவதற்கு கமலுக்கு என்ன உரிமை உள்ளது’’என்று ஆவேசமானார்.