வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதல்கட்டப் பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில், நேற்று முன்தினம் முதல் டிசம்பர் 16 வரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, ஒவ்வொரு இடங்களுக்குச் சென்று பரப்புரை செய்து வருகிறார். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை அவர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார். இதனிடையே ட்விட்டரிலும் பரப்புரைக்கு இடையிடையே கருத்துத் தெரிவித்து வருகிறார். காலையில் எம்.ஜி.ஆர் தொடர்பாக ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் ஆளும் கட்சியினை விமர்சனம் செய்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், "இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு, மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு" என்று தெரிவித்துள்ளார்.