டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ யாத்திரையில்’ கமல்ஹாசன் கலந்துகொண்டார். அவருடன் மக்கள் நீதி மய்யத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய கமல்ஹாசன், "மத ரீதியான அரசியலை பாஜக செய்து வருகிறது. மதத்திற்குள் பிரிவினை செய்வதை எதிர்க்கவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் கூறினார். மத அரசியல் இந்தியாவை சிதைத்து விடக்கூடாது என்ற நோக்கத்திற்காகத் தான் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முக்கிய காரணமாக அமைந்தது. கட்சியினர் அனைவரும் ஒரே வித கருத்தோடு செயல்பட வேண்டும். கட்சி தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது என்பதால், தலைவர் கூறும் கருத்தை மட்டுமே நிர்வாகிகள் வெளி இடங்களில் பேசவேண்டும்" என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கமல், "பொங்கலை முன்னிட்டு சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம். அதற்கான அனுமதியை கேட்டிருக்கிறோம். கிடைக்கும் பட்சத்தில் பணிகளைத் தொடங்கிவிடுவோம். மெரினாவில்தான் ஜல்லிக்கட்டிற்கான ஒரு பெரும் போராட்டம் நடைபெற்றது. நகரத்தில் இருப்பவர்களுக்கும் ஜல்லிக்கட்டின் அருமை பெருமைகளைப் புரிய வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.