நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
திமுகவுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று நிபந்தனையை கமல்ஹாசன் ஏற்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
முன்னதாகவே அவர் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல இருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், செர்பியா நாட்டிற்கு சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருந்த நிலையில் மீண்டும் தனது பயணத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் - லைஃப் திரைப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா நாட்டில் நடைபெற்று வருகிறது. கமல் அல்லாத காட்சிகளை படக்குழு படமாக்கி சென்னை திரும்ப உள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் நாள் முடியும் வரை வெளிநாட்டு பயணத்தை கமல் ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.