Skip to main content

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- மக்கள் நீதி மய்யத்தின் வாக்குறுதியை வெளியிட்ட கமல்ஹாசன்!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

Kamal Haasan announces promise of People's Justice Center

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதியை இன்று (09/02/2022) காணொளி காட்சி மூலம் வெளியிட்டார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். 

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 

அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர், முறையான மழைநீர் சேகரிப்பு அமைப்பு உறுதி செய்யப்படும். காற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் தொழில் நுட்பத்தைப் பரவலான பயன்பாட்டிற்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும். 

 

கிராம சபை போல, தங்களது வார்டிற்கு என்ன தேவை என்பதை அந்தந்தப் பகுதி மக்களே முடிவு செய்வதற்கு வழிவகுக்கும் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் செயல்பாட்டுக் கொண்டு வரப்படும். மக்கள் நீதி மய்யம் கவுன்சிலர்கள் இக்கூட்டத்தில் தங்களது மாதாந்திர செயல்பாட்டுக்கான அறிக்கையைச் சமர்ப்பிப்பார். 

 

வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிப்படுத்த, வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து விவாதித்து, நிதி ஒதுக்கும் கவுன்சிலர் கூட்ட விவாதங்கள் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். 

 

தொழில்நுட்பத்தின் உதவியோடு வீடு தேடி உள்ளாட்சிச் சேவை மையம் வரும். மக்கள் தேவைகள் வீட்டு வாசலில் நிவர்த்தி செய்யப்படும். 

 

குறிப்பிட்ட கால உத்தரவாதத்துடன் கூடிய தரமான சாலைகள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றிப் போடப்படுவதை உறுதி செய்வோம். 

 

அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலைக்கு உயர் தொழில்நுட்ப உதவியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும். 

 

ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத்தொட்டி அமைத்து குப்பைக் கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும். பொது இடங்களில் தேவையான கழிப்பிடங்கள் உறுதி செய்யப்படும். 

 

வீட்டு வரி, குடிநீர் வரி போன்ற வரிகள் வசூலிக்கும் முறை சீரமைக்கப்படும் பள்ளிகள் & மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும். முறையான பராமரிப்புடன் பூங்கா, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலகம் அமைப்பது உறுதி செய்யப்படும். 

 

ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைக்கப்படும். இதன்மூலம் அவசர ஊர்திகள் சென்சார் உதவியுடன் கண்டறிந்து தடையில்லா போக்குவரத்து உறுதி செய்யப்படும். 

 

மழைநீர் தேங்காத தெருக்கள் என்ற நிலையை அடைய, முறையான மழைநீர் வடிகால் அமைப்புகள் அமைக்கப்படும். 

 

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படும். கட்டிட வரைபட அனுமதிகள் விரைவாக இலஞ்சமில்லாமல் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். 

 

இவ்வாறு  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்